சிறப்புக்கவிதை 12- நான் ஆணையிட்டால் -திருநிலா சூரியன்

யாவருக்குமான உரிமைகளின் மொத்தப் பிடியை தமது கையில் எடுத்துக்கொண்டு ஆதங்கப்படுகின்றது கவிதை...பசுமை வளங்களை ஒழித்துக்கட்டிவிட்டு , கண்களுக்கு மேல் கையைக் கொடுத்து தூரப்பச்சையைக் காட்டி , அதுதான் காடு என்று அறிமுகப்படுத்துவது போலான ஒரு அவல நிலையை வெகு சீராக நோக்கி , நகர்ந்து கொண்டிருக்கும் நடப்பைக் கண்டிக்கும் உரிமையின் குரலாய் தனது வருத்தம் மேலிடவும் ஓங்குகியிருக்கின்றது ஒரு சாட்டை ....

மண் வளம் அழித்தலும் காடுகள் ஒழித்தலும் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தன்முனைப்போடு நடந்தேறி வருகின்ற கொலைக்கள சம்பவங்களாகும் என வேரூன்றிப் போகின்றது ஒரு கவனம் வரிகளின் வீரியத்தில்..முன்பிருந்ததையும் விடவும் காடுகளின் சதவிகிதத்தை இலகுவாக இழந்து கொண்டிருப்பதில் பெருமையடைகின்றோம்..மரங்களைச் சரித்துவிட்டு மழைக்கு மலட்டுப் பட்டம் கட்டிவிடுகின்றோம்....உயிர்வளியினையும் தீர்த்துக்கட்டிவிட திட்டமிட்டுத் தேறுகின்றோம்...நிலங்களைக் கூறுபோட்டு வீதிகள் செய்து விளம்பரங்களில் நிறைவடைகின்றோம் என்றபடி சுழற்றியடிக்கின்றது கவிஞர்.திரு.நிலாசூரியன் அவர்களின் கையகத்தில் இருத்திக் கொண்டிருக்கும் சாட்டையின் பிடி...

"தாயைக் கொன்று
கூறுபோட்டு
விற்பனைக்கு வைத்துவிட்டீர்... "

மேற்கண்ட வரிகளில் தகிக்கிறது ஒரு கனல்....மண்ணைத் தாயாக்கி , தாய் மண்ணாக்கி அதற்குண்டாகும் துயரங்களைத் தனதாக்கித் தகித்திருக்கிறது இந்தக் கனல்....

உலகம் தோன்றிய முதல் இன்றுவரை வாழ்வாதாரங்களில் முதன்மையானதாகத் தழைத்துக்கொண்டிருக்கும் ஒன்றை , அதன் வாழ்வை பறித்துக்கொள்வது நமது வாழ்வையும் அதனோடு புதைப்பதற்குச் சமமென்றாக்கி ஒரு எச்சரிக்கையை ,

"வாழவேண்டுமெனில்......!''

இனி
மரங்களுக்கும் வீதி வேண்டும்
மறக்காமல் ஒதுக்கிவிடு... "

மேற்கண்ட வரிகளில் விதைத்திருக்கின்றது கவிதை...."

நாம் நமது என்கிற கொள்கைப்பிடிப்போடு போகின்ற கால ஓட்டத்தில் , வேடிக்கை பார்ப்பதற்கு மட்டுமே நின்று நிதானிக்கும் வழக்கத்தில் சுகம் கண்டுகிடக்கும் சமுதாயப் பார்வையை உணர்ந்து , பொதுவியல் கருத்தோடு முன் நடத்திப் போகின்ற கொள்கையினைப் பிடித்துக்கொண்டு பயணிக்கின்றது ஒரு அக்கறை தனது பாதையின் சீற்றங்கள் அறிந்தும் , என்பது தெளிவுற விளங்கிக்கொள்ளப்படுகின்றது கவிதையின் திறப்பில்....

இறுதிவரிகளில் கட்டளையாய் தனது எண்ணத்தை , உத்வேகத்தை ரௌத்திரமுகம் காட்டி நிலைநாட்டுகின்றார் கவிஞர்....காடுகளின் பங்கினையும் , மரங்களின் இன்றியமையாமையையும் , நாளைய நலனுக்காக அனைவருக்குமான பொறுப்பினையும் , உணரப்படவேண்டியனவாய் வலியுறுத்தி "நான் ஆணையிட்டால்" ஆக்கமூட்டுகின்றது....

எழுதியவர் : புலமி (28-Apr-14, 6:29 pm)
பார்வை : 128

சிறந்த கட்டுரைகள்

மேலே