விண்ணளவு மகிழட்டும்

வானும் கடலும் இணைந்திட்டு
வண்ணம் ஒன்றானது !
சுகமும் சூழலும் இணைந்திட்டு
சுகமான காட்சியானது !
அழகிய அணங்கு அமர்ந்திட்டு
ஆழ்ந்த சிந்தனையில் !
அனங்கன் அவனை நினைத்திட்டு
ஆறாத வருத்தத்தில் !
( அணங்கு = பெண்
அனங்கன் = மன்மதன் )
முகம் காட்டாமல் திரும்பிட்டு
முதுகை காட்டுவதேன் !
முப்பொழுதும் அவள் முனகிட்டு
முற்றும் துறப்பதேன் !
அமைதியை நாடிங்கே வந்திட்டு
அசைவற்று துடிப்பதேன் !
அனுக்கம் நெஞ்சிலே பொங்கிட்டு
அணுக்களும் அலைவதேன் !
( அனுக்கம் = வருத்தம்
அணுக்கள் = உயிரணு )
தனிமையே முடிவென நினைத்திட்டு
தள்ளிதான் வந்ததேன் !
தவன் அவன்நினைவால் ஏங்கிட்டு
தனித்தே இருப்பதேன் !
( தவன் = நாயகன் )
கோலமயில் இங்கே தவிக்கவிட்டு
கோமகன் எங்கே சென்றான் !
கோடை வெப்பமாய் உயர்ந்திட்டு
கோமகள் மனமும் சுடுகிறதே !
உற்றம் சுற்றத்தை மறந்திட்டு
உள்ளமிங்கே அழுகிறதே !
விரைவில் நிலையும் மாறிட்டு
விண்ணளவு மகிழட்டும் !
பழனி குமார்