​வீர வணக்கம்

​வீர வணக்கம் ...
வெறிகொண்ட தீவரவாதத்தால்
பறிகொடுத்தோம் ஒரு வீரனை !
அரக்க குணம் படைத்தோரின்
இரக்கமிலா இதயத்தால் இழந்தோம் !

வீர் வணக்கம் ....
பண்பற்ற பகைவரில் சிறுநரி கூட்டம்
பற்றுள்ள ஒரு சிங்கத்தை வீழ்த்தியது !
மதவெறி கொண்ட மதியிலா மந்தை
மமதை கொண்டு கொன்றது மறவனை !

​வீர வணக்கம் ....
தன்னலம் பாராமல் தாய்நாட்டிற்காக
இன்னல்கள் இடையே போராடியவன் !
பொதுநல நோக்குள்ள பொன்மனமவன்
சூதுள்ளம் கொண்டவரால் மடிந்திட்டான் !

வீர வணக்கம் ...
இரும்புள்ளம் கொண்ட இளங்காளை ​
இளந்தளிர் மனைவியை விட்டு சென்றது !
நாட்டுப் பற்றுள்ள நன்மகன் பெற்றவரையும்
மொட்டான தன் மகளையும் விட்டுப் பறந்தது !

வீர வணக்கம் ....
சடலத்தை கண்டும் சற்றும் அதிராமல்
சலனமிலா நெஞ்சங்கள் வணங்கின !
பாசத்தை மறைத்து பதற்றம் குறைத்து
தீரனின் குடும்பம் தியாக உள்ளங்களானது !

வீர வணக்கம் ....
சூழ்ந்துள்ள சுற்றங்கள் சுகமாய் வாழ்ந்திட
சுற்றியுள்ள கூட்டம் சுகபோகம் பெற்றிட
அரசியல் வியாபாரம் நடத்துபவர் நடுவில்
அயலாரை அழிக்க போராடிய வீரத்திருமகன் !

வீர வணக்கம் ....
தீவிரவாதிகள் மடிந்திட தீவிரமாய் போராடிய
இந்திய இளவீரன் இணையிலா இன்பத்தமிழன் !
இதயத்தில் நிறைந்த முகுந்தனுக்கு வீரவணக்கம்
இன்னுயிர் தந்த இந்திய வீரனுக்கு வீரவணக்கம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-May-14, 8:58 am)
பார்வை : 2625

மேலே