ஈற்றடி வெண்பாக்கள்

மண்ணிதில் வாழ்வோர் அனைவரும் போற்றிடக்
கண்ணிமை போல எனைக்காத்தாய் - உண்மையில்
பெண்ணாய்ப் பிறந்ததன் அர்த்தம் புரியவைத்தாய்க்
கண்ணோரம் கண்ணீர்க் கடல்

பாரத நாட்டிலே ஊழல் ஒழிகவெனத்
தாரக மந்திரம் பேசிவிட்டு - பாரதத்தை
வாயூறத் தான்சுவைக்கும் செந்நாய்கள் கூட்டமொன்றால்
ஈயூற இல்லை இடம்

கல்மேலே கல்வைத்து வீடுகளைக் கட்டுதற்கு
நல்லோரைத் துன்புறுத்தும் மாக்களைக் - கொல்லவே
வில்லும்கூர் வாளுமே தேவையில் லை!நல்ல
சொல்லே மிகவும் சுடும்

வண்ணத்துப் பூச்சியொன்று ஆண்மை ததும்பவந்து
கண்கவர் பூவொன்றைக் கூடித்தன் - எண்ணத்தை
நாணமுறக் கூறிவிட்டு பூவுடைய புன்னகையைக்
காண வருமாங் கனி

புறங்கூறி வாழ்வை நகர்த்தும் மனமே
அறங்கூறி வாழ்வாய் இனிமேல் - திறமற்ற
பொய்களைப் பேசித் திரிந்தே இவ்வாறு
உய்வதும் வாழ்வா உணர்

வெண்ணிலா காயும் இரவில் இருட்டிலே
பெண்ணிலா என்னையும் கண்டதால் - உண்மையில்
கண்ணும் சிமிட்டாது நின்றதவள் பேச்சாலே
தண்ணென மாறும் தழல்

வேகமாய் இடங்களை எட்டுகின்ற எண்ணத்தில்
வாகனங்கள் ஓடுது மண்ணிலே - மோகனமும்
இப்படிதான் போகுது நாட்டிலே விட்டுவிட்டால்
வெப்பம் உயரும் உலகு

விவேக்பாரதி

'வெண்பா எழுதலாம் வாங்க' என்ற தளத்தில் அகரம் அமுதன் அளித்திருந்த 'ஈற்றடிக்கு வெண்பா' என்ற பயிற்சிக்கு முயற்சியாக நான் எழுதிய வெண்பாக்கள்.

எழுதியவர் : விவேக்பாரதி (2-May-14, 1:02 pm)
பார்வை : 90

மேலே