அட்டைகளின் பெருங்காடு

வார்த்தைகளின் கல்வெட்டில்
மனம் ஊர்கிறது
அட்டைகளின் பெருங்காடாய்
எழுத்துக்களின் லிபியறியாமல் !
உனதும் எனதுமான
உயர் நவிர்ச்சியொன்றுடன்
மட்டுமே கூடிய
வெளிப்பாடாய்
முகமூடியணிந்து
முட்களை மறைத்து
பூச்செண்டு நெடிநுகர்
மயக்கத்தில்
பூக்களின் இதழ்களுக்குள்
பதுங்குகிறோம் !
மேலும் பசை தடவி
நா நீட்டி
பூச்சிகளின் திசை நோக்கி
நகர்கிறோம்
தாவரபட்சிணியின் பாவனைகளுடன் !
உதடொன்று பேசியபடி
தொடரும் உறவுகளில்
வெளிக்கொணர முடியா
பன்முகப் பரிமாணங்களில்
பிறழ்ந்த படியிருக்கும்
மாயப்படிமங்கள் -
அதிவெறி கொண்டு
ஆட்கொல் பசியுடன்
குயுக்தி வகுத்து
விழித்திருக்கின்றன !
துக்கத்தின் விஸ்தீரணங்களெங்கும்
பரஸ்பர களிப்புகளில்
நேற்றைகளின் நிறைவேறா
கரந்தலுவல்
கடைமத்துக் கிடைதயிராய்
இலக்கின்றி திரிந்தே
இறுதிவரை நிஜமுணர்த்தா
நிராசையுடன் -
வார்த்தைகளின் ஊர்வலத்தில்
உறவுகளின் வேர்
மிதிபட்டுக் கிடக்கும்
ஊமை ரகசியமாய் .