நட்பே நீ மட்டும் தானே வாய்த்திருக்கிறாய்

இசைக்கத் தெரியாத
மரம் நான்
என்னுள் புல்லாங்குழலை
நீ தான்
கண்டெடுத்தாய்
கரடு முரடான
கல் நான்
என்னை பாதையாய்
நீ தான்
பக்குவப்படுத்தினாய்
பூக்க மட்டுமே
தெரிந்த என்னை
நீ தான்
பூஜைக்கு ஆயத்தப்படுத்தினாய்

நிலவென்று
நினைத்த என்னுள்
கறைகளை நீ தான்
காட்டித் தந்தாய்
வர்ணிக்க மட்டுமே
தெரிந்த என்னுள்
கவிஞனை
நீயே கவிதையாகி
காட்டி தந்தாய்

காற்றை விடவும்
வேகமாய் என்மேல்
வீசினாய்
ஏசினாய் பேசினாய்
விழுந்து விடாமல்
நீ தானே தாங்கினாய்

என்னுள் சுயநலத்தை
சுருக்கென்று சொன்னாய்
சிரித்துக் கொண்டே
பொதுவெளியில் நீ தான்
என்னை சுமந்தாய்

கண்களுக்குள் விழுந்த என்னை
கட்டிவைத்து தண்டிப்பாய்
கொட்டித் தீர்த்தப் பின்
விட்டுப் போகாமல்
என்னையே
உற்றுப் பார்ப்பாய்
உதிர்ந்து கிடக்கும் என்னை
வலிந்து மீண்டும் கோர்ப்பாய்

காதல் கனிந்திருந்தால்
காதலியை கவிதையாக்கியிருப்பேன்
காதலுக்குள்
கடந்து போயிருப்பேன்
கல்யாணம் முடிந்திருந்தால்
முடிச்சு போட்டவளுக்குள்
மூச்சடைத்து மூழ்கியிருப்பேன்
அதிலேயே முடிந்திருப்பேன்
என்ன செய்வேன்
நட்பு மட்டுமே வாய்த்திருக்கிறது
அதிலும் நீ
உப்பாக என்னுள்
சாரம் கூட்டியிருக்கிறாய்
யாரும் வரா தூரம்
வந்திருக்கிறாய்
வேறு யாரை பாடுவேன்
வேரூன்றி விட்டேன்
விளைவது எல்லாமே
உன் பொழுதுகள் தான் ....!

எழுதியவர் : Raymond (7-May-14, 2:45 am)
பார்வை : 189

மேலே