இந்திய சுதந்திர மாவீரர் மருதநாயகம் பாகம்-2

மனம் மாறிய மருதநாயகம் :

திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்! சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா? உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா?

இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-?இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை,சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!இந்திய சுதந்திர இஸ்லாமியர்களின்


மதுரைப் போர்!


முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல…உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!



1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது! போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு,பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார்! எதிரிக்கு எதிரி நண்பன்! பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.



தக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி , தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.


ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்! விழிகள் மிரள யோசித்தனர்.



ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும்,கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள்! அதனால் பயம் அதிகரித்தது! காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே நடந்தது! மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின! ரத்தம் கொட்டின! ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார்.


பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.

தொடரும்...............

எழுதியவர் : லெத்தீப் (6-May-14, 11:12 pm)
பார்வை : 98

மேலே