நான் எழுதும் கவிதைகள்

காட்சியைக் கண்டால் கவிதை எழுதுவேன்
கவிதையை எழுதி காட்சியைத் தேடுவேன் !
நினைத்தவுடன் எழுத நான் கவிஅரசனல்ல
நினைப்பதை எழுத வாலிபக் கவிஞனுமல்ல !

சுழலும் சிந்தையுடன் சுழல்வேன் தினமும்
சூழலைக் கொண்டு சிந்திப்பேன் நானும் !
சுழன்றிடும் புயலில் சிக்கியும் தவிப்பேன்
சூறைக் காற்றாய் கற்பனையும் பறக்கும் !

மைக்கொண்டு எழுதும் பழக்கம் நின்றது
மையல் கொண்டது கையும் கணினியும் !
விரல்களும் புரிகிறது விந்தைகள் பலபல
வீரமும் பிறக்கிறது விரைந்து எழுதுகிறது !

கருவே இல்லாத கவிதையும் உருவாகுது
உருவே இல்லாத கருத்தும் தோன்றுகிறது !
சமுதாய சிந்தனையே என் சரீரம் ஆனது
சமத்துவ கொள்கையே என் சாரீரமானது !

சிந்திக்கத் தூண்டின நடைபெறும் நிகழ்வுகள்
நிந்திக்க வைத்தன கவிதையின் வரிகளால் !
உணர்வுக்கு உரமிட்டன உண்மை வரலாறுகள்
உள்ளம் தெளிவாகி உணர்வுகள் வரிகளானது !

காலத்தை கடந்திடவும் ஞாலத்தில் உள்ளவரை
கணநேரமும் வீணன்றி கவிதைகள் விளையுது !
வாசிப்பீர் ரசிப்பீர் வாழ்த்துங்கள் கவிதைகளை
குறை இருப்பின் தவறாது எனை திருத்திடுவீர் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-May-14, 3:12 pm)
பார்வை : 242

மேலே