விருந்தாகும் வெற்றி - வினோதன்

மதிப்பென்ன மதிப்பெண்ணால்
வருமென்றா நினைத்தாய் ?
பிஞ்சே - அதுவுன் வாழ்வு
வெல்ல - சற்றே சுத்து வழி,
எவ்வளவெனினும், அவ்வளவே !

வாழ்க்கையென்பது ஓடம்
ஓடும் - கல்வியெனும்
ஒருதுடுப்பு இல்லாவிடினும்,
வேறு துடுப்புகளை
கண்டறிந்து வேர்புகு !

மருந்து-பொறியாளனாய்
ஆகாவிடில் - விடியல்
வீடு வந்து சேராதா ?
சூரியனை - கட்டி இழுக்க
கதவோரம் கரையேற்ற
கல்வி வேண்டாம்
முயற்சி போதும் !

உயிரை மாய்ப்பது
உங்களுக்கு - எளிதான வழி !
பெற்றோரின் துன்ப வலி
தெரியுமா உங்களுக்கு ?
கால்களில் மாட்டி கசங்கும்
பூக்களைப் பெற்ற
செடிகளிடம் செவி கொடுங்கள் !

தோல்வி கண்டோரெல்லாம்
காலனை காண விழைந்தால்
பூமிப்பந்து - முடிவிழந்த
பிணக்குவியல்களில் தான்
குடியிருக்கும் - அதுவுமே
தோற்றதாய் உணர்ந்தபின் !

வென்றவனுக்குள் - உண்டான
நெருப்பு அணைந்திருக்ககூடும்...
தோற்றவனின் தோளில்
நெருப்புப் பந்தொன்று
பருந்தாய் மாறி அமரும்,
பறந்துவிடாமல் பார்த்துகொள் !
வெல்ல அதுபோதும், எப்போதும் !

கல்வி - நீ வெல்ல
உருவாக்கப்பட்ட
வெல்லக் கருவி மட்டுமே...
கொல்லவல்ல என்பதை
மனதில் கொள் - வேறு
உளி கண்டுபிடி - கண்டு
வெற்றி உரி அடி !

எத்தனை முறை விழுந்தாய்
என்பதல்ல வாழ்க்கை,
விழுந்த - அத்தனை முறையும்
எழுந்தாய் என்பதே வாழ்க்கை !

(12 வகுப்பு பொதுத்தேர்வில் தோற்று துவண்டுகிடக்கும் தம்பி, தங்கைகளுக்கு)

எழுதியவர் : வினோதன் (9-May-14, 8:27 pm)
பார்வை : 102

மேலே