குழந்தைத் திருமணம் செய்து வைத்த அன்னைக்கு மகள் எழுதும் கடிதம்
அன்புள்ள அம்மா,
மேல் படிப்பு படிக்க விரும்பிய கனவுக்கு
முற்றுப்புள்ளி வைத்தது நீ குறித்த
அந்த சுபயோக சுபதினம்.
இனிய இசை கொடுக்கும் நாதமும், தவிலும்
என் ஒப்பாரிக்குத் தான் இசை அமைத்தன!
எழுதுகோல் பிடிக்கும் கையில்
இப்போது கரண்டியைப் பற்றினேன்!
இங்கு என் வியர்வைத் துளிகள் தான்
மத்தப்பில் ஒளியாய் சிதறுகின்றன
நான் வேலை பார்ப்பதோ பட்டாசுத் தொழிற்சாலை!
துள்ளி விளையாட்டும் என் பாதங்கள்
மெட்டிக்குள் அடங்கிக் கிடக்கின்றன!
விளையாட்டு ஆடைகளை களைத்தெறிந்து
புடவைக்குள் புகுந்து விட்டேன்!
புத்தகம் சுமக்கவேண்டிய நான்
குழந்தையை சுமக்கப் போகிறேன்!
நீ உன் சுமையை இறக்கி
என்னைச் சுமக்க வைத்து விட்டாயே!