===+++எழுதுகிறேன்+++===

எழுதுகிறேன் எழுதுகிறேன்
எண்ணங்களை எழுதுகிறேன்
எனதருமை சமுதாயம்
எண்ணுமென்றே எழுதுகிறேன்...!!!
***
பணத்துக்காக சிந்தனையை
விற்பதற்கு எழுதவில்லை
புகழுக்காக செந்தமிழை
புண்ணாக்கி எழுதவில்லை...

எழுத்துக்களில் நல்லறிவை
நல்கிடவே எழுதுகிறேன்
பழமதுவே பைந்தமிழை
பருகிடவே எழுதுகிறேன்...

***
இலக்கணமும் இலக்கியமும்
இயம்பிடவே எழுதவில்லை
என்னறிவே பெரிதென்று
எடுத்துரைக்க எழுதவில்லை...

இன்பத்தமிழ் இயல்புகளால்
ஈர்க்கப்பட்டு எழுதுகிறேன்
இலக்கணமும் இலக்கியமும்
இயக்குவதால் எழுதுகிறேன்...

***
என்புலமை திறமையினை
பறைசாற்ற எழுதவில்லை
சுயநலமே அடைவதற்கு
சுவைத்தமிழை எழுதவில்லை...

சுயமரி யாதையினை
சொல்வதற்கு எழுதுகிறேன்
சுயஒழுக்கம் கெட்டுப்போன
சூட்சுமத்தை எழுதுகிறேன்...

***
கன்னியரை கவர்வதற்கு
காதலைநான் எழுதவில்லை
காதலையே எழுதி எழுதி
காகிதத்தை நிறைக்கவில்லை...

போதையிலே மூழ்குகின்ற
பேதையரை எழுதுகிறேன்
பாதையிலே மாறுகின்ற
பாவியரை எழுதுகின்றேன்...

***
மாட, மாளிகைக்காய்
மனம்விரும்பி எழுதவில்லை
மனித, மூளையினை
மண்ணாக்க எழுதவில்லை...

மானுட மூடத்தை
எரிப்பதற்கு எழுதுகிறேன்
மறுமலர்ச்சி வேண்டுமென்று
மறக்காமல் எழுதுகின்றேன்...

***
சாதிமத பேதங்களை
சாகடிக்க எழுதுகிறேன்
சமதர்மம் வளர்ந்திடவே
சளைக்காமல் எழுதுகிறேன்...

ஏரோட்டும் எம்முழவர்
எரியும்வயிர் எழுதுகிறேன்
பாரோட்டும் எம்தலைகள்
பகடயத்தை எழுதுகிறேன்...

ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு
உரிமைவேண்டி எழுதுகிறேன்
மரணித்த மனிதத்தை
எழுப்பிடவே எழுதுகிறேன்...

கவியெழுதக் கற்றிடவே
கவிதைகளை எழுதுகிறேன்
காலத்தின் தேவைகளை
கருப்பொருளில் எழுதுகிறேன்...

இன்றைய உலகிற்கும்
நாளைய தலைமுறைக்கும்
உருபடியாய் சிலகருத்தை
உணர்த்திடவே எழுதுகிறேன்...

எழுதுகிறேன் எழுதுகிறேன்
எண்ணங்களை எழுதுகிறேன்
எனதருமை சமுதாயம்
எண்ணுமென்றே எழுதுகிறேன்...!!!


-----------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (12-May-14, 4:01 pm)
பார்வை : 91

மேலே