என்னைப் பற்றி

ஊர்:
கருவுற்று நான்பிறந்தேன் கோயில் நகரில்
இருப்பதோ கோட்டை நகரில் - அருவிபோல்
ஊற்றெடுக்கும் காவிரியும் நல்லான் கணபதியும்
வீற்றிருக்கும் புண்ணிய!ஊர் காண் !

தாய்:
சானகி என்பது எந்தாய் பெயர்தானே
மீனதைப் போலே விழியுடையாள் - நானவளைப்
போற்றியே பாடுவேன் என்றென்னை ஈன்றதில்லை
ஆற்றினைப் போலவள் தான் !

தந்தை:
ஊர்மக்கள் உல்லாச மாய்ப்போகச் செய்பவன்
ஊர்க்காக எல்லையில் நின்றவன் - கார்விற்கும்
கம்பேனி ஒன்றிலே மேலாளன் என்தந்தை
எம்மன்னன் பேர்கண்ணன் பார் !

தமையன்:
தம்பி யுடையான் படைகளுக் கஞ்சானாம்
அம்மொழி உண்மையே தானையா - அம்மாளின்
செல்லந்தான் என்தம்பி என்றனுக் கும்முயிர்தான்
நல்லவன் பேரோஸ்ரீ வத்ஸ் !

நான்:
பள்ளிசெல்லும் காலத்தில் பைந்தமிழும் ஊட்டுகின்ற
கள்சுவையைத் தான்விரும்பும் நல்லமகன் - துள்ளி
விளையாடும் மாணாக்கர் கூட்டத்தில் நானோ
தளையாக்குஞ் சின்னப் பயல் !

பற்று :
சொற்கலப்பை கொண்டுதான் நாடுழுதோன் பாரதியின்
அற்புதப் பாக்களுக்கு நானடிமை - கற்பகத்தாள்
தேவிபரா சக்தியின்மேல் பற்றுகொண்டேன் நானிங்கே
தூவிடுவேன் என்கவிப் பூ !

நட்பு:
எழுதுகோ லென்று பெயரையும் கொண்ட
தொழுதிட வேண்டிய பெண்தான் - முழுமையாய்க்
காகிதத்தை யும்நிரப்பி வைப்பாள் அமுதமென்
றாகிடும் பேனாத்தோ ழி !

எழுதியவர் : விவேக்பாரதி (14-May-14, 1:24 pm)
பார்வை : 824

மேலே