சில திருமணங்கள்

சில நிச்சயிக்கபட்ட திருமணங்கள் -

பொருத்தம் பார்க்கப் பொருந்திய மனமது
பொன் வாழ்வில் ஏனோ பொருந்தவில்லை,
பொருந்தா மனமெனத் தெரியும் நேரம்
பொருத்தம் பார்த்தவர் அருகில் இல்லை..

பெருமை காக்க, பொறுமை காக்க
பொல்லா உலகம் போதனை சொல்ல,
பொன்னும் பொருளும் இருந்தும் என்ன
பொய்யாய் வாழ்வை நகர்த்திச்செல்ல..

பொறுமை இழந்து, பெருமை இழந்து,
பொருந்தப் போட்ட பொன்னும் இழந்து,
பொருந்தா மனமது பொருந்தியது முடிவில்
“மனம் ஒத்து பிரிகிறோமென
கையொப்பம் இடுகையில்”


சில காதல் திருமணங்கள் -

இளமை மேலே இதயம் இருக்க
காமச்சாவி கண்ணை திறக்க,
காமம்.. காதலின் வண்ணம் பூசியிருக்கும்
சில வெள்ளை நிலவில் சாயம் வெளுக்கும்..

உற்றார் சுற்றார் தேவையில்லை,
சுவர்க்கம் அவரின்றி வேறுயில்லை,
என்ற வாக்கியங்கள் மாறிடுமே
நரகம் மேலிதற்கு என்றிடுமே..

இளமை மேலிருந்த இதயம் இறங்கிட,
கள்ளச் சாவியென புத்தி எழுந்திட,
மனம் ஒத்திப்போனது முதன் முறையாய்
“மனம் ஒத்து பிரிகிறோமென
கையொப்பம் இடுகையில்”


சில கேள்விகள் –

ஆணவம் கொள்ளும் காதல் இன்பக்
கட்டில் மேலே மட்டும் தானா..??
ஈராறு கட்டங்கள் சொன்ன பொருத்தம்
முத்தச்சத்தம் வரையில் தானா..??
தேகம் மொய்த்துப் பிரிவதுவென்றால்
ஈயும் நீயும் வேறில்லை..
வக்கீல் பேச்சை கேட்கும் பழக்கம்
வாழ்க்கைத் துணையுடன் ஏனில்லை..??

சில பதில்கள் -

இளமை ஏக்கத்தில் வந்த காதலை
இரவு வந்ததும் காமம் கொன்றிடும்
உறவு சொல்லியே வந்த காதலை
உண்மை கசந்ததும் காலம் கொன்றிடும்
பொதுவாய் பொருத்தம் பொருத்திக்கொள்வதே
உன் ஆசைக்கு மேல், உறவை நிறுத்திக்கொள்வதே
காதல் காமம் தாண்டி நிற்பதே,
தோல் சுருங்கும் போதும் சேர்ந்து நிற்பதே..!!

எழுதியவர் : தீபக் பாஸ்கர் (15-May-14, 4:08 pm)
சேர்த்தது : தீபக் பாஸ்கர்
பார்வை : 263

மேலே