நீயும் அழகுதான்

கருப்பாயி தலையணைக்குள் முகத்தை புதைத்தவளாக அழுது கொண்டிருந்தாள் மௌனமாக
தனது தோழிகளுடன் செல்லும் நேரமெல்லாம் தன்னை மட்டும் விடுத்து தோழிகளையே கிண்டல் அடிப்பவர்களாக இருந்தனர் இளைஞர்கள்.
ஏன் என்னை கிண்டல் செய்கிறார்களில்லை.என் அழகு பிடிக்கவில்லையா?நான் கவர்ச்சி இல்லாதவளா?என்றெல்லாம் பலவாறு சிந்தித்து தாழ்வுணச்சிக்கு ஆட்பட்டவளாய் யாருக்கும் தெரியாமல் மொனமாய் அழுது கொண்டிருந்தாள்.
கருப்பாயி பெயருக்கேற்றமாதிரி கருப்பானவள்.ஆண்களைக் கவரும் கவர்ச்சிகூட அவளிடம் குறைவுதான்.ஆனால் அழகில் சுமாரானவள்தான்.
அவளுக்கு சிலவேளை தனது பெற்றோர்கள் மேல் கோபம் வரும் அவளது பெயரை கேட்டு மற்றவர்கள் சிரிக்கும்போது.
ஒருமுறை தனது தந்தையிடம் ஏன் எனக்கு இந்தப் பெயரை வெத்தீர்கள் என்று கேட்க அது ஒங்கப்பத்தா பெயர்.நீ ஒங்கப்பத்தா மாதிரி கருப்பா கலையா இருந்ததால ஒங்கம்மா ஆசைய வச்ச பேரது என்று பெருமையா சொல்லக் கேட்டு மனதுக்குள் புழுங்கினாள்.
அவளால் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடிந்தது.ஒன்றை மட்டும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை.அதுதான் சில வாலிபர்கள் காதல் கடிதத்தை இவளிடம் கொடுத்து இவளின் தோழிகளுக்கு கொடுக்க சொல்வது.சிரித்த முகத்துடன் வெறுப்பாக அக்கடிதங்களை பெற்று மனதுக்குள் அழுதுகொண்டே சேர்ப்பாள்.
கருப்பாயி சில வேளை படைத்த கடவுள் மேலும் கோபப்பட்டு கோயிலுக்கும் செல்லாமல் கடவுளை தன்னை மற்றவர்கள் விரும்ப படைக்காததற்காக சபிப்பதுமுண்டு.
கருப்பாயி கருப்பாயி என் பலமுறை அழைத்த சத்தம் கேட்டு சிந்தனையிலிருந்து விடுபட்டு கண்களை துடைத்துக் கொண்டு என்னம்மா என சுரனையற்ற குரலில் சொல்லியவளாக அம்மா முன் போய் நின்றாள்.
என்ன பிள்ள கண்ணல்லாம் சிவந்து போய் கிடக்கு?அழுதியா என வினவினாள்.
கருப்பாயி சுதாரித்துக் கொண்டு,இல்லையம்மா கண்ணுக்க தூசி விழுந்திட்டுது.என சமாளித்தாள்.
தாயால் மகளின் நிலை ஓரளவு புரிந்ததால் ,போய் முகத்த கழுவிட்டு வா கோயிலுக்கு போயிட்டு வருவம்எனக்கூற,நீங்க போய்ட்டு வாங்க அம்மா எனக்கு கொஞசம் வேலை கிடக்கு என தனது விருப்பமின்மையை வௌிப்படுத்தினாள் கருப்பாயி.
கருப்பாயிக்கு இப்போதெல்லாம் யாராவது ஒரு வாலிபன் தனக்கு காதல் கடிதம் தரமாட்டானா என ஏக்கங்கொண்டவளாக எதிர்பார்ப்புடன் இருப்பாள்.
சில வேளை தவறாக இருந்தாலும் காதல் கடிதத்தை பார்க்கும் ஆவலில் தனது தோழிகளுக்காக வாலிபர்கள் கொடுக்கும் கடிதங்களைப் படித்து தனக்கு வந்த கடிதமா நினைத்து சந்தோசப்பட்டு பின்பு அழுகையாக மாறி அழுது கொண்டிருப்பாள்.
அன்று வழக்கம் போல் தனது தோழியை சந்திப்பதற்காக ஒரு புத்தகத்தை கையில் எடுத்தவளாக வீதியோரமாக நடந்து கொண்டிருந்தாள்.பின்னால் ஒருவர் வருவது போன்ற உணர்வு வரவே திரும்மிப்பார்த்தவளுக்கு
அதிர்ச்சியாக இருந்தது.காரணம் அவனை இதற்கு முன் காணவே இல்லை.நல்ல உயரமானவன் மான் நிறம் சுமாரான அழகு.
எக்ஸ்கியூஸ்மி கோபிக்காம இந்தக் கடிதத்தை வாங்கி படித்திட்டு உங்க அபிப்பிராயத்தைச் சொல்லுங்கோ என்று கூறி கடிதத்தை அவள் கையில் திணித்தி விட்டு கிறு கிறு நடந்து சென்றான்.
கருப்பாயியால் நம்பவே முடியவில்லை.கைகளில் நடுக்கம் மேலிட கடிதத்தை தாவனிக்கு மறைத்துக் கொண்டு வேகமாக தனது வீட்டை நோக்கிதிரும்மி நடந்தாள்.
அம்மா கோயில்க்கு சென்றிவிட்டதால் வீட்டில் யாருமே இருக்கவில்லை.அவசரமாக வீட்டுக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டு கைகள் நடுங்க கடிதத்தை பிரித்துப் படித்தாள்.
அன்புள் கருப்பாயிக்கு, உங்களை உங்களுக்குத் தெரியாம சுமார் ஆறு மாத காலமாக ஒரு தலைப்பட்சமாக காதலித்து வருகிறேன்.உங்கள் அழகும் உங்கள் நடை உடை பாவனையும் என்னை கவர்ந்துவிட்டது.பல முறை எனது விருப்பத்தை சொல்ல நினைத்தும் தைரியம் இல்லாதவனாக இருந்துவிட்டேன்.பொருமை இழந்தவனாகவே இக்கடிதத்தை எழுதி உங்களிடம் தந்துள்ளேன். மறுக்காமல் உங்கள் விருப்பத்தை சொல்லும்படி தயவாய்க் கேட்டுக் கொள்கிறேன்.உங்களைத் தவிர வேறு ஒரு பெண்ணை என்னால் நினைக்க முடியாது.இப்படிக்கு உங்களுக்காக ஏங்கும் பாலன்!
கருப்பாயியால் நம்பவே முடியவில்லை .இது கனவா நினைவா?கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.ஆம் ஆனந்தக் கண்ணீரது.கடவுளை நினைத்துக் கொண்டாள் பெருமையாக!