நானும் தனிமையும்

விடை அறியா
விடியலை நோக்கி
நீள் இரவு
நீந்தும் நேரம் ...

நாணம் கொண்ட பெண்
தன்னை மூடிக்கொள்வதுப் போல
தேன் சிந்தும் புஷ்பங்கள்
சந்திரனைக் கண்டு
இதழ் மூடிக்கொள்ளும் நேரம் ....

கொஞ்சம் மழலைகள்
கொஞ்சம் கண் அயரும் நேரம்......

காட்டினங்கள்
கூச்சலிட்டும் கூக்குரலிட்டும்
கதை பேசிக்கொள்ளும் நேரம் ....

தறிகெட்டு தாறு மாறாய்
தரை மீது தவழும்
தார் சாலையும்
தார்மீக அமைதிகொள்ளும் நேரம் ....

நித்திரையே பிரதானமாய்
நிதர்சனமே ஆதாரமாய்
ஊரடங்கி போன நேரம் .....

நானும்
தனிமையும்
தவணை முறையில்
தவித்துக் கொண்டிருந்தோம் ....

மனமிறங்கி நான்
தனிமையை
தனிமைப்படுத்தினாலும்
பிரித்தே வைத்து
பழக்கப்பட்ட விதி
எங்கள் இருவரையும்
இணைத்து வைத்தது ....

விதிவிலக்கு கொண்ட
விதியை ...

நன்று சொல்வதா ....?
நொந்து கொள்வதா ....?

எழுதியவர் : ஏழிசைவாணி (17-May-14, 8:33 am)
பார்வை : 295

மேலே