ஜிஹாத் தொடர்ச்சி 2 - நாகூர் கவி

ஜிஹாதிற்கான கட்டளைகளும் நிபந்தனைகளும்.....

திருமறையின் சில வசனங்கள் - உதாரணமாக, "ஆகவே, (உங்களை எதிர்த்து யுத்தம் புரிய முற்பட்ட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள்" என்று சூரா பகரா 2:191 கூறுவது - யுத்தம் செய்யும்படிச் சொல்கின்றன என்பது உண்மையே. ஆனால் இப்படிப்பட்ட சில வசனங்களை வைத்துக்கொண்டு இஸ்லாம் வன்முறையையும் போரையும் தூண்டும் மார்க்கம் என்று சொல்வது தவறானது. ஏனெனில், இதுபோன்ற வசனங்கள் எந்த சூழ்நிலைகளில் அப்படிச் செய்யச் சொல்கின்றன என்று பார்க்க வேண்டியது முக்கியம்.

முஸ்லீம்களைத் தாக்கியவர்களுக்கான ஒரு தக்க பதிலடியாகத்தான், ஒரு எதிர்ச்செயல்பாடாகத்தான் இத்தகைய வசனங்கள் அமைகின்றன. எல்லா முஸ்லீம்களுக்குமான ஒரு பொதுவான உத்தரவல்ல இது. முதலில், நம்பிக்கையாளர்கள் தாமாகச் சென்று தாக்குவதற்கு இஸ்லாத்தில் அனுமதியே இல்லை. தாக்குதல் முதலில் எதிர்பக்கமிருந்து வரவேண்டும்:

அல்லாஹ்வுடைய பாதையில் (நீங்கள் செல்வதைத்தடுத்து) உங்களை எதிர்த்தோருடன் நீங்களும் யுத்தம் செய்யுங்கள். ஆனால் நீங்கள் வரம்பு கடந்துவிட வேண்டாம். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிப்பதில்லை.

(சூரா பகரா 02: 190)

எதிரியிடமிருந்து ராணுவ ரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரும்போதுகூட, அமைதியான வழிமுறைகளைக் கையாண்டு, போரைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது. வேறு வழியே இல்லை என்ற சூழ்நிலை வரும்போது, தற்காப்புப் போர் செய்ய மட்டும்தான் இஸ்லாம் அனுமதிக்கிறது. அப்படிப் போர் செய்யும்போதுகூட பொறுமையை கடைப்பிடிப்பதையும் வரம்பு மீறாமல் இருப்பதையும் இறைவன் விரும்புகிறான்.

இந்த இறைவசனத்தில்கூட "யுத்தம் செய்யுங்கள்" என்று சொல்லும்போது ஜிஹாத் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜிஹாத் என்ற வார்த்தைக்கு போர் செய்வது என்ற அர்த்தம், மொழி ரீதியாக இல்லை என்பது தெளிவாகிறது.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் ஹம்ஸா உஹதுப் போரில் கொல்லப்பட்டார்கள். போர்க்களத்தில் பகைவர்களால் கொல்லப்படுவது புதுமையான ஒன்றல்லதான். எனினும் அதற்கு பிறகு நடந்துதான் எவரையும் கோபமூட்டக்கூடிய நிகழ்ச்சியாகும். மக்கா நகரில் (முஸ்லீம்களுக்கு எதிராக) இருந்த குறைஷி கோத்திரத்தாரில், முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்த அபூசுப்யான் அவர்களின் மனைவி ஹிந்தா என்பவளின் ஏற்பாட்டில் ஹம்ஸாவின் சடலத்திலிருந்து குடல்கள் கீறிஎடுக்கப்பட்டு, அவற்றை ஹிந்தா தன் கழுத்தில் போட்டுக்கொண்டு ஆடினாள். ஹம்ஸாவின் ஈரலை எடுத்து சுவைத்தாள். பதிருப்போரில் தன் உறவினர்களை ஹம்ஸா கொன்றார் என்ற காரணத்திற்காக, அவரைக்கொன்று, அந்த இரத்தத்தினால் தன் தலையை முடிவதென்றும், அதுவரை தலைவாரிக் கட்டுவதில்லை என்று ஹிந்தா சபதம் செய்திருந்தாள். ஹம்ஸா அவர்களை சுற்றி சிந்தியிருந்த ரெத்தத்தை வழித்தெடுத்து தலையில் தேய்த்து ஹிந்தா தலைமுடியைக் கட்டிகொண்டாள்.

போரில் இறந்த பெருமானாரின் தோழர்களில் வேறு சிலரும் இவ்வாறு அலங்கோலப்படுத்தப்பட்டனர். எனவே இத்தகைய கோரச் செயல்களைச் செய்தவர்களைப் பழி வாங்க வேண்டுமென்று முஸ்லீம்கள் துடித்தனர். ஆனால் முஸ்லீம்களின் வல்லமையை எதிரிகள் ஏற்றுக்கொண்ட சூழ்நிலையிலும்கூட, பகைவர்களை தண்டிப்பதில் நிதானமாக இருக்க வேண்டும், வரம்பு கடந்து விடக்கூடாது என்று இறைவன் போதித்து, ஆனால் இதிலும் அவனுக்கு உவப்பானது பொறுமையாய் இருப்பதுதான் என்று வலியுறுத்துகிறான்:

(விசுவாசிகளே! உங்களைத் துன்புறுத்திய எவரையும்) நீங்கள் பதிலுக்குப் பதிலாய் துன்புறுத்தக் கருதினால், உங்களை அவர்கள் துன்புறுத்திய அளவே அவர்களை நீங்கள் துன்புறுத்துங்கள். (அதற்கு அதிகாமாகவன்று. தவிர, உங்களைத் துன்புறுத்தியதை) நீங்கள் பொறுத்துக் கொண்டாலோ, அது சகித்துக் கொள்வோருக்கு மிக்க நன்றே! (சூரா அன்நஹ்ல் 16 : 126)

இதன் காரணமாகத்தான் அந்த ஹிந்தாக்கூட மன்னிக்கப்பட்டாள். அபூசுப்யான் அவர்களுடைய இல்லத்தில் அடைக்கலம் புகுந்தவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டார்கள் என்று சொல்லி, மக்கா வெற்றியின்போது இஸ்லாத்தில் இணைந்த அபூசூப்யானுக்கும் பெருமானார் கண்ணியம் கொடுத்தார்கள்.

இப்படி அனுமதிக்கப்பட்ட போர்களில்கூட, மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் கைவிட்டுவிடக்கூடாது என்பதை, இஸ்லாமிய சட்டமும் வரலாறும் தெளிவாக விளக்குகின்றன. ஆனால் சட்டத்தை யார் பின்பற்றினார்கள்? பெருமானார் வேண்டுமானால் கருணையோடு நடந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தின் நிறம் வேறானதாகிவிடவில்லையா என்று இஸ்லாத்தின் எதிரிகள் கேள்வி எழுப்பலாம். வெற்றி பெறுகின்ற கலகங்களை எல்லாம் புரட்சி என்றும், தோல்வியடைகின்ற புரட்சிகளை எல்லாம் கலகங்கள் என்றும் நாமகரணம் சூட்டி விடலாம். இதில் நியாயத்தைப் பிரித்து அறிவது எப்படி? மார்க்கமும் ஒழுக்கமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்பதை புரிந்துக்கொண்ட உண்மையான முஸ்லீம்களுடைய வாழ்க்கையையும் வரலாறையும் இத்தகு பதில் சொல்கின்றன.

(மீண்டும் ஜிஹாத் தொடரும்)

எழுதியவர் : நாகூர் ரூமி (18-May-14, 9:58 am)
பார்வை : 190

மேலே