தேடல்களில் தொலைந்து - மணியன்
உருவங்கள்
இரு துருவங்களில். . .
கவலை இல்லை
உள்ளங்கள் இங்கு
ஒட்டிக் கொள்ளட்டும் . . . . .
தூர இருந்தும்
நீ எனக்கு
குளிர் தருகிறாய் . . .
பாதி விரிந்த இரவுகளில்
நீதானே
என் இமை திறக்கிறாய் . . . .
மகரந்தங்கள்
மாலையிலும் வாடுவது
மன்னன் உன்
மடி தவழ்வதற்கே். . . . .
தேவைகளைத் தேடி
தேசம் கடந்து நீ
தேடல்களில் சுகங்களைத்
தொலைக்க வைத்தாய். . . . .
நினைவுகள்
நீச்சம் பெறும்போது
கனவுகளில் நீ
உச்சம் தருகிறாய். . . . . .
தென்றலைத் தீண்டும்
தேக ரகசியம்
தேவதை எனக்கு
கற்றுத் தந்தவன் நீயடா. . . . .
காவலன் நீ
கனலாகித் தினம்
என் உள்ளம் நனைக்க
கனவுப் போர்வைக்குள்
காலம் எல்லாம் நான்
குளிர் காய்கிறேன் . . . . . .
அங்குசமிட்ட
அஸ்தமனச் சூரியனை
அதிதூரம் போகச் செய். . . . . .
அடிவானம் சிவக்கும்
அந்த நாள் வரை
நான்
அயராது காத்திருப்பேன் . . . . . . .
உணர்வுப் பாலங்களில்
உறவுகள் நடை போட . . . .
உரிமை கீதங்களை
உனக்காக நான்
உள் மனதில் சுரம் பிடிப்பேன். . .
உன் நினைவுகளில் அரங்கேற்றுகிறேன். . . .
*-*-*-* *-*-*-* *-*-*-*
சற்று இடைவெளி விட்டு வந்துள்ளேன்.
பணிச்சுமையை பரணில் தள்ளி
படைப்புகளில் எட்டிப் பார்க்கிறேன்.
உங்கள் மணியன்.
*-*-*-*-*- *-*-*---* *-*-*-*-*-*