கட்டு விரியனின் முட்டை
கட்டு விரியனின் முட்டை.
அழகம்மை மீது எனக்கு ஒரு கண் இருந்தது. எனது சொந்த அத்தை மகள்தான் அவள். அவளை எனக்கு கட்டி வைக்காமல் யாரோ ஒருத்தனுக்கு அவளை கட்டி வைத்து திடீர் பணக்காரன் ஆகும் என் எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டனர் அவளது பெற்றோர். “கான்சாங்கினஸ்” திருமணம் செய்தால் பிள்ளைகள் அங்கஹீனமாகப் பிறக்குமாம். என் கனவு கலைந்து பல நாட்கள் ஆயிற்று. நான் படித்தவன். மிக மிக அதிகம் படித்தவன். லட்சக் கணக்கில் மாத சம்பளம் பெற்று, சென்னையில் பிரபலங்கள் தங்கும் இடத்தில் மூன்று பெட் ரூம் அபார்ட்மெண்ட் ஒன்று வாங்கி ஹோன்டா சிடியில் வலம் வருபவன். ஆயினும் பூர்வீக சொத்து என்று எனக்கு ஒன்றும் கிடையாது. அழகம்மை எனக்கு மனைவியாக வந்து இருந்தால் சென்னையில் மிகப் பெரிய பணக்காரர்கள் வரிசையில் நானும் ஒருவனாய் இருந்து இருப்பேன். ஏஏனெனில் கோடிக் கணக்கில் சொத்து அவள் பெயருக்கு வரும். அதற்காக நான் கவலைப் படவில்லை. நானும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.
இவ்வளவு என்னை பாதித்த அந்த அழகம்மை பெயருக்கேற்ற அழகி.. மீன்போன்ற கண்களும், பூரித்த உதடுகளும் பார்ப்பவரை மீண்டும் பார்க்கச் சொல்லும் அழகு. ஆனால் பதினாறு வயது தாண்டியும் அவள் பூப்படையவில்லை. திமு திமு வென்று வளர்ந்து இருந்தவள் இன்று அல்லது நாளை உட்கார்ந்து விடுவாள் எனக் காத்து இருந்து கடைசியில், மருத்துவரிடம் காட்டினர்.
இந்த மருத்துவர்கள் ஏன்தான் தங்கள் மேதாவித்தனத்தை பாவப்பட்ட படிக்காத மக்களிடம் காட்டுகிறார்களோ தெரியவில்லை.
“இது டர்னர்ஸ் சிண்டிரோம்”. இந்த நோய் உடையவர்கட்கு ஒன்றில் கருப்பை இராது அல்லது வளர்ச்சி அடையாமல் இருக்கும். கழுத்தில் சவ்வு போல் ஒருவகை செதில் படர்ந்து இருக்கும். சமயங்களில் இதயமும் கிட்னியும் கூட நல்ல வளர்ச்சி அடையாமல் சரியானபடி உருவாகாமல் இருக்கும் என்பதால் மார்பகங்கள் அகன்று, காம்பு பருத்து இருப்பினும் பூப்படைவது கடினம். இதற்கு ஈஸ்ட்ரொஜென் ட்ரீட்மெண்ட் கொடுத்தால் பூப்படைவர். ஆயினும் பிள்ளைப் பேறு பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை”
அவர் கொடுத்த ட்ரீட்மெண்ட் மற்றும் அறிவுரையின்படி நான்காம் மாதம் பருவம் அடைந்த அழகம்மை பெயரில் அத்தனை சொத்துக்களையும் எழுதி வைத்து விட்டனர் அவளது பெற்றோர். ஊரெங்கும் தேடித் தேடி வீட்டோடு ஒரு நல்ல மாப்பிள்ளையையும் தேர்வு செய்து மணம் முடித்து வைத்தனர். திருமணம் முடிந்த ஒராண்டு நிறைவைக் கொண்டாடி பல திருயாத்திரைகளை முடிக்கச் சென்றபோது, அந்த மார்ச் மாத வெள்ளிக் கிழமை மதியம் சரியாக மூன்று மணிக்கு, அம்மா அப்பா கணவர் என மூவரையும் ஒரு விபத்தில் இழந்தாள் அழகம்மை. காரில் இடது புற மூலையில் அவள் படுத்து கிடந்ததால் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தவள் அனாதை ஆகி விட்டாள்.
எல்லா உறவினர்களையும் போலத்தான் நானும் அந்த இழவு வீட்டிற்குத் தேவையான உதவிகள் செய்து வந்தேன். அழகம்மையின் மாமன் மகள் ஆகிய பானுமதியும் அவள் கணவன் சுரேஷ் பாபுவும் அழகம்மைக்கு மிக நெருக்கமாக மாறி விட்டு இருந்தனர். ஏழு நாட்கள் கடந்தும் அவர்கள் அவளோடு அவள் வீடிலேயே தங்கி இருந்தனர்.
எனது பார்வை எப்போதும் துல்லியமான அலசிப் பார்க்கும் பார்வை. எனது பார்வையின் பொருளை யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ, பானுமதிக்கு நன்றாகவே புரிந்து இருந்தது. அதனால் அவள் நானும் அழகம்மையும் தனியே இருப்பதை தவிர்க்கும் வகையில் கூடவே இருந்தாள். நல்ல வேளையாக அவர்கள் அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்ததில் அழகம்மை மீது உண்மையா அன்பு கொண்ட அவர்கள் அவளை அவ்வப்போது வந்து வேண்டிய உதவிகளை செய்து தருமாறு என்னைக் கேட்டுக் கொண்டு புறப்பட்டனர். எனக்கு மட்டும் என் அத்தை மகள் மீது அன்பு இல்லையா என்ன. மூன்று மாத்ததில் நான் ஐந்து முறை அவள் வீட்டிற்குச் சென்று தேவையான் உதவிகள் செய்து வந்தேன். வேலைக்காரி துணையுடன், டி.வி பார்த்துக் கொண்டு அழகம்மையும் தன் சோகத்தை மறக்க ஆரம்பித்து பழையபடி மேக்கப் செய்து கொண்டாள். பொட்டு வைத்துக் கொண்டாள். அடிக்கடி அவளை சந்தித்து அடி மனதில் இருந்த அவள் பால் இருந்த ஈர்ப்பு என்னை இரவுகளில் அந்தரங்க கனவுகள் காண வைத்ததில் நான் கொஞ்சம் வெட்கி அவளைப் பார்ப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என முடிவு எடுத்து இருந்தேன். கனவில் கூட நான் நல்லவன். கற்புக்கரசன்.
ஒரு வாரம் அவள் வீட்டுப் பக்கம் போகாமல் இருந்த்போது பானுமதி என்னை செல்லில் அழைத்தாள். அழகம்மை கடும் காய்ச்சலுடன் வாந்தி எடுத்ததில் ரத்த ழுத்தம் குறைந்து
சாப்பிடுவது சீரணிக்காமல் மூச்சு விட கஷ்டப்படுகிறாள் என்பதால் உடனே வந்து பாருங்கள் என அழைத்தாள். குடும்ப மருத்துவர் வந்து பார்த்து விட்டு அவருக்கே உரிய மேதாவிப் பாணியில்,
“இது ஸ்டாப்பிலோகாக்கஸ் ஆரியஸ் எனப்படும் கொடிய நச்சு வைரஸ் நோய்.
“இவளுக்கு எப்படி இந்த நோய் வந்தது”
“மிக அழுத்தமான உள்ளாடைகள் அணியும் பெண்களுக்கு அதில் வளரும் நச்சுக் கிருமிகளால் இவ்வகை நோய் ஏற்படும். இதனை சுலபமாய் குணப்படுத்தி விடலாம் ஆயினும் ஏழெட்டு மாதங்களில் இது மீண்டும் துளிர்க்கும். அதனால் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இது உயிர் கொல்லி நோய் என பெரிய குண்டு ஒன்று வைத்துப் பேசிவிட்டு ஆயினும் பயப்படாதீர்கள் என போலியாக சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். பானுமதியில் பாசத்திலும் மருத்துவரின் திறமையாலும் அழகம்மை நான்றாக தேறி வந்து விட்டாள்.
அன்று ஆகடு 15. சுதந்திர தினம். விடுமுறை என்பதால் இல்லாத தேச பக்தியை இருப்பதாகக் காட்டிக் கொள்ள அனைத்து டி,வி. சானல்களும் போட்டி போட்டுக் கொண்டு இருப்பதை பொறுமை இன்றி மா.ற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். மீண்டும் அழகம்மைக்கு உடல் நலம் சரியில்லை. ரொம்ப மோசமாக இருக்கிறாள் உடனே வந்து பாருங்கள் என பானுமதி அழைப்பு விடுத்தாள்.. அடுத்த பத்தாவது நிமிடம் நான் அங்கு நின்றபோது,
“மிக மிக மோசமாக இருக்கிறாள். மாடிக்குப் போய் பாருங்கள்” எனக் கூறி விட்டு நான் படியேறிப் போவதையே பார்த்து நின்றனர். நான் அவள் அருகில் சென்றபோது “மலர்களைப் போல்” அவள் உறங்கிக் கொண்டு இருந்தாள். அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற நினைப்பில், மீளவும் வேலைக்குச் செல்ல வேண்டும் என பொய் சொல்லி விட்டு வீடு திரும்பினேன். மீண்டும் மதியம் மூன்று மணிக்கு பானுமதி போன் செய்தாள். அழகம்மை இறந்து விட்டாள் என்றும், அது சாதாரண நிகழ்வு அல்ல என்றும் கொலை என்று குடும்ப மருத்துவரும் இன்ஸ்பெக்டரும் சந்தேகிக்கிறார்கள் என்பதால் நான் உடனே வந்து அவர்கட்கு உதவும்படி கெஞ்சினாள். ”
“என்னது..கொலையா.. அய்யயோ, இதென்ன புதுக் குழப்பம். இதோ, இப்போதே வருகிறேன்” எனக் கூறி உடன் அங்கு சென்றேன்.
முன்பே சொல்லி இருக்கிறேன். எனது பார்வை, துல்லியமான அலசிப் பார்க்கும் பார்வை. ஆனால் அதே மாதிரி என்னை முறைத்துப் பார்க்கும் காவல்துறை இன்ஸ்பெக்டரின் பார்வையை காணச் சகியாமல் நான் பானுமதியிடம் இது எப்படி நடந்தது எனக் கேட்டேன்.
என் அருகில் வந்து என் கையைப் பிடித்து குலுக்கிய ஆய்வர், அவர்கட்கௌ எப்படித் தெரியும் .இனி விசாரித்து முடித்த பின்னரே தெரியும். அதனால் யாரும் இந்த இடத்தை விடோ, ஏன் ஊரை விட்டோ செல்லக் கூடாது. எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் அனைவர்க்கும் நல்லது “ எனக் கூறி என்னைப் பார்த்து கண் அடித்து விட்டுச் சென்றார்.. இதில் நட்பு உள்ளதா அல்லது நாடகமா என நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.
போஸ்ட் மார்டத்துக்கு உடலை எடுத்துச் செல்கிறோம் என குடும்ப மருத்துவரும் ஆய்வரும் சொல்லி விட்டுச் சென்றபோது, அவள் படுத்து இருந்த பெட் ஷீட், தலையணை, காலணை ஆகிய அனைத்தையும் பார்த்துப் பார்த்து எடுத்தனர். ஒரு தலையணையில் அவள் பூசி இருந்த மை இரு கண்களாகவும் உதட்டுச் சாயம் சிவப்பாகப் பதிந்தும் ஒரு புதிய இம்ப்ரெஷ்ன்
வடித்து இருந்தது.
மதியம் சாப்பாடு கொடுக்கும்போது நன்றாகப் பேசி மாத்திரை சாப்பிட்டுப் பின்னரே அவர் தூங்கியதை பார்த்து இறங்கி வந்தோம் அதன் பின்னரே அவர் இறந்து போனதால் தன் மீதும் தன் கணவர் மீதும் எந்த குற்றமும் இல்லை என பானுமதி கூறினாள்.
என் பங்குக்கு நான் பார்த்து விட்டு உடனே சென்று விட்டதால் நான் நிரபராதி என வாதம் செய்தேன்.
போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்தது. குடும்ப மருத்துவர் தன் மேதாவித்தனத்தை அதிலும் காட்டி இருந்தார்.
பலியானவர் வயது இருபது. பெண். அவர்க்கு பிறப்புறுப்பில் அழற்சி நோய் இருந்தது. அதனால், சிவந்து வீக்கத்துடன் ஈரப் பத்மாய் இருந்தது. மற்றபடி கற்பழிப்பு ஏதும் செய்யப் படவில்லை. ஆயினும், அவர் பலவித நோய் காரணமாக மருத்துவம் செய்து வந்ததாலும், மன உளைச்சளாலும் அதிக மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்து கொண்டாரா என சாத்தியக் கூறுகளை ஆய்ந்தபோது, வயிற்றில் சீரணிக்கப் படாத உணவும் அனுமதிக்கப்பட்ட அளவில் மாத்திரை கலந்தும் இருந்தது. அதனால் வேதியல் நச்சுத் தன்மையும் இல்லை. மூச்சுக் குழல் செயற்கை இறுக்கம் அடைந்து காணப்படுவதில் அது விரல்களால் அழுத்தம் கொடுத்து வந்தது என்பதால் இது குரல்வளையை அழுத்து பின் மூக்கினை அடைத்ததில் மூச்சுத் திணறி இறந்து உள்ளார் என பிட்டு பிட்டு வைத்து விட்டார்.
சிறைக் கம்பிகள் சிந்தனைத் தூண்கள். சிறையில் இருக்கும்போதுதான் காந்தி தன் சுய சரிதையை எழுதினார். நேருவும் டிஸ்கவரி ஆஃப் இண்டியா எழுதினார். இப்போது நானும் எழுதுகிறேன்.. நான் ஏன் சிறைக்கு வந்தேன். உண்மையில் நான் குற்றவாளியா?
என்னைத் தேடி வந்த கிறிஸ்தவ பாதிரியார் நான் குற்றவாளி என்றும் அதற்காக நான் மனம் வருந்தி அழுதால் இறைவன் எனக்கு மன நிம்மதியை தருவார் எனக் கூறி எனக்காக பைபிளின் வாசகங்களை எசாயா 59 இல் இருந்து படித்துக் காண்பித்தார்.
”5. கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் நெருக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.
6. அவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது.
7. அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது, அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது.
8. சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்”
என்னையும் என மன ஓட்டத்தையும் எப்படி அத்தனை ஆண்டுகட்கு முன்னர் இப்படி எழுதி வைத்திருக்க முடியும். இது எல்லாம் ஏதோ பிதற்றல். ஆயினும் உதைக்கிறதே. என் நெஞ்சுக்குள் புகுந்து என்னை சித்திரவதை செய்கிறதே. நானா கொலைகாரன். நான் திட்டமிட்டு கொலை செய்தேனா? பைந்தமிழ், செந்தமிழ் என்பதுபோல் இது என்ன தமிழ்? கிறிஸ்தவ தமிழ் என்று ஒன்று இருக்கிறதோ.. இதைத்தான் சொல்வதை விட்டு விட்டு சுரையுள் ஆராய்வது என்று கூறுவார்கள் போலும். கட்டு விரியன் முட்டையை யாராவது அடைக் காப்பரோ? சிலந்தி வலையில் நெசவு செய்தது என்ன வகை ஜீன்ஸ் என போட முடியும்.. நல்ல கற்பனை. நான் எங்கோ இருப்பதைப் பார்த்த பாதிரியார் என்னை விட்டு வேறு எங்கோ சென்று விட்டார்.. நான் எங்கு இருக்கிறேன்.
என்னோடு சேர்ந்து சொத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என திட்டமிட்ட பானுமதியும் அவள் கணவனும் தப்பித்து சொத்தை அடைந்து விட்டனர். நான் மட்டும் இந்த சிறையில்
மனதில் கட்டு விரியனின் முட்டைகளை அடை காத்து உடைத்துப் போட்டுக் கொண்டே இருக்கிறேன் அவர்களோவெனில்
சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்” என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். சுய சரிதையில் அத்தனையும் எழுதி விட்டால் அவர்களும் கட்டு விரியன் முட்டை உடைக்க வந்து விடுவார்கள்.