மறு விடியல் பூக்கட்டும் == மெய்யன் நடராஜ்

பயிர்செய்கைக்கொவ்வாத
கட்டாந்தரை பிளந்து
உள்ளே விழுந்து
உயிர் பூண்டு
வேரூன்றி கிளர்ந்தெழக் கூடிய
அற்புத வித்து நீ

உனக்குள்
உறங்கிக் கிடக்கும்
உன் விருட்சத்தை
உணராமல் மாற்றான்
மரத்திலிருந்து உதிர்ந்த
சருகுகளுக்காக
உன்னை தேய்த்துக்
கொள்ளும்போது நீ
யாருக்காகவோ
பாதரட்சையாகிறாய்.

உன்னைச் சிறகாக்கி
உன்னிலும் ஊனப்படவர்களை
உல்லாச பறவையாய்
பறக்க வைக்கும்
வித்தை படி.

துணிச்சல் விளக்குகளின்
துணை கொண்டு
அந்தகாரம் கிழித்து
சூரியனாய் பூத்துவிடு.

பீதிகளை அணிந்துகொண்ட
உன் தைரியங்களை
சலவைக்குப் போடு

மரணத்தின்
வாசல்களை மூடும்
கதவுகள் செய்வதற்கு
சாத்தான்களின் வேதங்களை
தள்ளி வைத்துவிட்டு
மயானங்களின் மத்தியில்
உயிர்வாழ்தலுக்கான
தொழிற்சாலைத் தொடங்கு

வாழத் தெரியா
மானுடத்தின்
வாழ்கை நுட்பக் கருவிகளை
பழுது பார்க்கும்
புதியதோர்
இயந்திரம் செய்.

கனவுகளைத் தூக்கித்
தோளில் போட்டுக்கொண்டு
இலட்சியங்கள் எதிர்கொண்ட
உன் காலடியை
நீ உருவாக்கிய
திசையில் எடுத்து வை.

உலகம் அழியப்போகும்
கடைசி கணங்களுக்கு
முன்பாகவேனும்
விழித்துக் கொண்டு
அதை தடுத்து நிறுத்தும்
சக்தி உன்னில் இருந்தும்
உலகை அழிவின் பாதையில்
வழிநடத்தும் உன்
சக்தியின் யுக்தியை
வல்லமைக்குள் இட்டுப்பார்.

எட்டாத தூரத்தில் இருக்கும்
இன்னொரு உலகத்தையும்
இணைத்துக் கொண்டு
அண்ட வெளிகளில்
உல்லாசப் பயணம் போகும்
உன்னால் இந்த பூமிக்கு
மறு விடியல் பூக்கட்டும்

கும்பகர்ணனின்
கூட்டுக் குடும்பத்துக்குள் கிடக்கும்
என் நாளைய சூரியனே
கொஞ்சம் வெளியே வா
எறும்புகளின்
இமயம் நோக்கிய பயணம்
உன் வெற்றிக்கு
வழிகாட்டி நிற்கிறது.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-May-14, 1:57 am)
பார்வை : 194

மேலே