அழுகிறாள் ஒரு தேவதை

வசந்தமே வாழி..!
இனிவரும்
நவீன காலங்களால்
உனக்கு
ஆபத்து வராமலிருக்கட்டும்

நான் அஞ்சுகிறேன்
பின்னாளில் ஒரு மழைநாளில்
உன் வானில்
நிறமற்ற வானவில் தோன்றுமோ..?

உன் ஜீவநதிகள்
சிறுநதிகளாகுமோ
சிறுசிறு நதிகள் காய்ந்து
மணல்வெளிகளாய்ப் போகுமோ..?

ராட்சசப் பல்லிகளின் முட்டைகளை
நாங்கள் பார்க்க நேரிட்டதுபோல்
என் சந்ததியினர்
மான்கொம்புகளைக் கண்டு
அதிசயிக்க நேரிடுமோ..!

உன் தாமரைக்குளங்களோ
அன்னப் பறவையினங்களை
அழித்துவிட்டன
கடற்புறங்களே
பெங்குவின் பறவைகளைக் காப்பாற்று

உன்
யானைக்காடுகள் அழிகின்றன
மலைச்சோலைகள்
மனைப்பட்டாக்களாயின

இயற்கையின்
இறக்கைக்குள்
அணுகுண்டு முட்டைகளின்
அடைக்காப்பு

உன் நீலவானில்
புகையோடுகிறது
ஈரமண்ணில்
பகையாடுகிறது

நாங்கள்
ஆர்ப்பாட்டமாக மலர்வதை
விஞ்ஞான வசந்தம்
என்கிறோம்

புதுயுக வெறியில் மனிதசக்தி
அழிவைநோக்கிப் போகிறது
அதன் ஆபத்தான சந்திப்பில்
வசந்தமெனும் தேவதையே
நீயேன்
வாய்ப் பொத்தி அழுகிறாய்..?

உன்
மௌன அலறல்கள்
மனிதனுக்குக் கேட்பதில்லை...! (1994)

('தரையில் இறங்கும் தேவதைகள்" நூலிலிருந்து)

எழுதியவர் : கவித்தாசபாபதி (24-May-14, 8:42 pm)
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே