கேள்விகள் கோடிகள் கோளத்தில்
கேள்விகள் பிறக்குது கோளத்தில் கோடிகள்
வேள்வியின் தீயாகுது பதிலின் பரிணாமத்தால் !
தடைகளை உடைக்குது தரமுள்ள பதில்களும்
தரங்களை இழக்குது சிலமலிவான பதில்களால் !
கேள்விகள் வந்திடாத இடமேது இவ்வுலகில்
கேள்விகளும் கேட்காத இதயமேது இங்கும் !
தொடுக்கவே துடிப்பர் கேள்விக் கணைகளை
தொடர்ந்து கேட்பதும் வேடிக்கை சிலருக்கு !
கேள்விகள் பிறப்பதும் கேட்பதும் தவறில்லை
கேள்விக் குறியாய் வாழ்வதுதான் குற்றமே !
கேள்விக்கு பதிலை அளிப்பதும் திறமையே
கேள்வியே புரியாமல் புலம்புவதும் மடமையே !
கேட்டிடும் கேள்வியால் நாட்டிடுவர் நீதியை
கேட்பவர் மதியினால் கேள்விகள் வென்றிடும்
உரைக்கும் பதில்களும் நெஞ்சினில் நின்றிடும்
உலகமும் விவாதிக்கும் உண்மைப் பொருளை !
கேளிக்கை வேடிக்கை கேள்விகள் அரங்கிலே
சிந்திக்க வைத்திடும் சிலரின் கேள்விகளும் !
சிரிப்பால் அதிர்ந்திடும் உதிரும் பதில்களால்
சிரிப்பாய் இருந்திடும் சிலரின் கேள்விகளும் !
கேள்விபதில் பகுதியே படிக்கவும் தூண்டிடும்
கேள்வியில் அடங்கிடும் பதிலும் சிலவேளை !
கேள்விக்கு பதிலே தோல்வியாகும் சிலநேரம்
கேள்வியும் பதிலும் சுவைத்திடும் பலநேரம் !
பழனி குமார்