காமம்
இதழ்களால் உறிந்து
என் வெள்ளை உடல் சூடேற்றி
செல்லும் இடமெல்லாம்
உடன் என்னை
கொண்டு சென்று
சுகம்கண்டு மகிழ்ந்தாய்
மெல்ல இழுப்பாய்
உன் மூச்சு நானென்பாய் ...
எதைப் பிரிந்தாலும்
எனைப் பிரியேன் என்றுரைப்பாய்
படுக்கையிலும் நான்
பக்கத்தில் வேண்டுமென்பாய்
நான் உருகிக் கரைய
உனக்கு மூச்சு வாங்கும்
வயிற்று பசி தீர்ந்ததும்
உன் வாய் தேடுவது
என்னைத்தான்
நான் உடனிருக்கும் போது
உள்ளம் ஒருநிலை படுவதாய் கூட
உளறி இருக்கிறாய் நீ ..
ஆனால் ,
உன் ஆசை தீர்ந்ததும்
தூக்கி எரிகிறாய் ..
என்னைப் பார்த்து அசிங்கபடுகிறாய் ..
நான் சிகரெட் என்பதால் ,,,
உன் வார்த்தைகள் பொய் ...
நான் தரும் தற்காலிக
சுகம் போல ...