ஜீவன்

[ பெண் மனம் ஒன்று தனது வாழ்க்கையின் ஓட்டங்களை தானே சொல்வது மாதிரியான வடிவம் தான் இந்த ஜீவன் ]

நெஞ்சில் களிப்போடு,
கையில் இனிப்போடு,
விழிகளில் ஆசையோடு,
காத்திருந்த நெஞ்சம்
கல்லாகிப் போனது,
பெண் பிள்ளையாக
நான் பிறந்ததால் !

காற்றடித்தால்
காணாமற் போகும்
களிமண் குடிசையில்,
கல்வியின் வாசம்
நுழைவதற்குக்
காசுக்கு எங்கே போவது ?

சில வண்ணச் சீருடையிட்டு,
சின்னப் பாதங்களில் உறையிட்டு,
சின்னஞ்சிறிய மலர்கள்
சிங்காரமாய் பள்ளி செல்கையில்
சிந்திய கண்ணீரைத் தொட்டு
சிரித்தபடி செல்லும் என் மனம் !

சில்லெனும் குளிரோடையில்
சித்திரமாய் தாமரை மொட்டு
சிரித்து நின்றால்தான், கதிரவனும்
சிறப்பாய்த் தன்
செங்கதிர்களை வீசுவான், ஆம் !
வளர்ந்து வரும் - என்
வயதுகளில் நான்
வளர்பிறையாகி
வாட்டும் பௌர்ணமியாகினேன் !

கல்விச் சாலைகளுக்கும்,
கடமைகளைச் செய்வதற்கும்,
கடந்து செல்லும்
காளையர்களின்
கண்ணாடி பட்டுக்
களைத்துப் போனது, இந்தக்
காய்ந்த உடல் ! என்
மனம் பார்க்கவில்லை யாரும், என்
குணம் காணவில்லை யாரும்,
கண்டது என் பருவம் தான் !
கணத்தது இந்த இதயம் தான் !

பட்டுச் சேலையிட்டு
பாரிஜாத மாலையிட்டு
மூணு பவுன் நகையிட்டு
முச்சந்தியில் நிறுத்தப்பட்டேன், என்
ஆசைகளுக்கு வேலியிட்டு
ஆயுள் முழுக்கத் தாலியிட்டு
ஆதரிக்க வரும்
அன்புக் கணவனின் கைப்பிடிக்க !

கணவன் என்றும்
கயவனும் இல்லை
காரியக்காரனும் இல்லை
குடிசைவீட்டுக் குடிமகனாகவே
குடியிருந்தான் குறைவில்லாமல் !

சொல்லிப் பார்த்தேன் நிலைமையை,
தள்ளிப் பார்த்தேன் வேலைக்கு,
அல்லிப் பூவாயிருந்த விழிகளில்,
ஆறுகளையும் விட்டுப் பார்த்தேன் !
எரி சாம்பலில் விழுந்தவன்
எழுந்திருக்கவே யில்லை !

இரும்பு பாலமிட்டு
இருப்புப் பாதைபோல
இருந்த என் வாழ்வு
இருண்டு போனது ! ஆம்
மலிவான விலையில்
மதுவருந்தி, உயிரை
மாய்த்துக் கொண்டான், என்
மணவாளன் !

நரை வளரும் காலத்தில்
மறைந்த நாயகனின் நினைவில்
நிறைகளைக் காணாத மனம்,
குறைகளில் நிரம்பி ஆயுளைக்
கரைத்துக் கொண்டு இருக்கிறது.

பெண் ஒரு ஜீவநதியா ?
ஜீவன் உள்ள மட்டும்
ஜீவிக்கிற மனதைத் தாருங்கள், - இல்லையேல்
ஜீவனுக்கு விடுப்பு கொடுங்கள் - அந்த
ஜீவன் நிச்சயம்
ஜீவிக்கும் இன்னொரு பிறவியில் !

எழுதியவர் : அசோக் vimala (4-Jun-14, 12:09 am)
Tanglish : jeevan
பார்வை : 93

மேலே