கனவுகள்

எருக்கலைப் பூக்களிடம்

இருப்பிடம் கேட்கும்

வயற் கரைக் காற்று

உருக்குலைந்த வட்டும்

உடையாத உறுதியுமாய்

செருக்குடன் நிற்கும்

நெட்டைப் பனை மரங்கள்.

கதிர் அறுக்க வரும்

கிளிகளை வயல் வெளியில்

கழிவிரக்கம்பார்த்து

விரட்டாமல் ரசிக்கும்

பரட்டைத்தலைக்

காத்தாடிக் கிழவன்.

கத்திரி வெய்யிலிலும்

காய்ந்து கருகாது சிந்திச்

சிதறிச் சிரித்துக் கிடக்கும்

கொன்றை மரப் பூக்கள்.

சித்திரை மாத சோளகக்

காற்றில் அட்சதை தூவும்

வேப்பங்க்காடுகள்.

குதிக்கால் குருதியை குத்தி

சுவை பார்க்கும் நெருஞ்சிச் செடிகள்

கூட்டாஞ்சோறு ஆக்கி கூடிக்

குதூகலிக்கும் குழந்தைகள்.

ஒற்றையாய் தொலைவில்

கரையும் அண்டங்காகம்

ஓசையின்றி அமைதியாய்

ஓடும் வாய்க்கால் நீர்

வழி நெடுக நிழல் போடும்

வாழைமரத் தோட்டங்கள்.

வாய் நிறைய வெற்றிலை

குதப்பி வலம் வரும்

ஊர்ப் பழசுகள் இவை

எல்லாம் என் பொறுப்பு என

ஊரின் மூலையில்

இறுமாப்புடன் வீற்றிருக்கும்

காட்டு வைரவர்.......



தொலைந்து போன அத்தனையும்

மனத்திரையில் ஒன்றன்

பின் ஒன்றாய் பயணிக்க

ஓங்கி ஒலித்த கடிகாரச் சத்தத்தில்

சிதறிய கண்ணாடித் துண்டுகளாய்

கனவுகள்.. கூட்டி அள்ளி

மறுபடியும் மூட்டைகட்டி

மூளையின் ஞாபக முடிச்சுக்குள்

நிரப்பி வைத்து அந்த சேமிப்பின்

திருப்தியில் தொடரும் பயணம்

இன்னோரு நாளை நோக்கி!

எழுதியவர் : சிவநாதன் (4-Jun-14, 1:20 am)
Tanglish : kanavugal
பார்வை : 144

மேலே