கழிவு நீர்க் கடையாலே

எங்க சாமி மனுக் கொடுக்க
எங்க வாழ்கை தொலஞ்சு போச்சு
ஏச்சுப் பொழைக்கும் இனங்க ளுக்கெ
ஏக கால மாகிப் போச்சு

தாலி தந்த கணவனிங்கே
தவிச்ச வாய்க்கு தண்ணிதல்ல‌
கூலி செஞ்ச காசையெல்லாம்
குடும்பத்துக்குத் தருவதில்ல‌

வருத்தமில்ல பிள்ளகுட்டி
வளருவதும் கருத்திலில்ல‌
தெருத் தெருவாத் திரிபவன‌
திருத்த வொரு பேருமில்ல‌

பெத்தவளக் கேட்டாக்கப்
பொறுத்திருந்து போகச்சொன்னா
வித்தையில்ல விடியுமுன்னே
விடைதெரிய வென்றுசொன்னா

அவரவர் பழவினைன்னு
ஆடிச்சொன்னர் பூசாரி
வெவரங் கெட்டவ நான்
வேறயென்ன எதிர்பாக்க‌

தரங்கெட்ட அரசாங்கம்
தம்பட்ட மடிச்சுக்குது
தன்னலமே இல்லையிண்ணு
தைரியமாப் புழுகுது

இட்டிலிய சோத்தத் திண்ணா
ஏழ சனம் ஒசந்துடுமா
பட்டியெல்லாம் டாஸ்மாக்
பல்லிளிச்சுக் கொல்லுதம்மா

சாதிவாழும் மண்ணிலே
சமுதாய மத்தியிலே
நாதியத்த சனங்களா
நாங்க‌ளுமே மனுசதான்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (6-Jun-14, 3:51 am)
பார்வை : 94

மேலே