காதலிக்க கற்றுக்கொள்

காதலிக்க கற்றுக் கொள்....
அதிகாலை பனியை...
கழுத்துக்கு இதம் அளிக்கும்
தலையணையை....
மணம் வீசும் மல்லிகை மொட்டுக்களை....
மின் தட்டுப்பாட்டில்
அரைபடும் அம்மியின் சத்தத்தை....
அன்னையின் பஞ்சு பொதியான
இட்லியை....

அதிரடியாக சாலையில் ஓடும்
ஆட்டோக்களை
நிறை மாத கர்ப்பிணியாக
செல்லும் பேருந்துகளை.....
பேருந்து நிறுத்தத்தில்
காதில் விழும் சம்பாஷணைகளை....

சாலையோரம் காதலனை
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
இளம் மங்கையின் கண்களை...

அலுவலகத்தில் காத்திருக்கும்
அன்றாட பணியின்
இருப்பிடமான கோப்புகளை.....
எரிச்சலில் கொட்டித் தீர்க்கும்
முதலாளியின் வார்த்தைகளை.....
கிடைக்கும் என்று எதிர்பார்த்த
முன்பணம் கிடைக்காத நேரத்தை....
படிப்பிற்கேற்ற வேலை இல்லை...
உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை
என்று கோபத்தில் கொந்தளிக்கும்
தந்தையின் சுடு சொற்களை......

இப்படியாக ஒரு நாளின்
அனைத்து நேரத்தையும்
அனைத்து நிகழ்வுகளையும்
காதலிக்க கற்றுக்கொள்......

காதல் இன்பமானது...
காதல் கொண்டால் மனம்
பித்துப் பிடித்து
சுற்றி இருக்கும் எதுவும்
உன்னை கஷ்டப்படுத்தாது...
அதனால்
உன்னை சுற்றும் அனைத்து
நிகழ்வுகளையும்
காதலிக்கக் கற்றுக்கொள்.........
வாழ்க்கை இன்பமயமாகிவிட
எல்லாமே இனிமைதான்...

எழுதியவர் : சாந்தி (5-Jun-14, 11:44 pm)
பார்வை : 130

மேலே