இஸ்லாத்தில் ஆன்மீகம் தெரிந்துகொள்வோமா

இறை காதல் கொண்டோரை, பித்தர், பைத்தியக்காரர் என்று இந்த உலகம் கூறும். அந்த இறை காதலருக்கு எத்தனையோ துன்பங்கள், துயரங்கள் வரும். அது மட்டுமல்ல உற்றார், உறவினர்களுடைய தொடர்பும் துண்டிக்கப்பட்டு விடும். உலகத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிடும். இப்படி உலக தொடர்பை சிறிது காலம் இறைவன் துண்டித்து வைத்து, இறை அன்பை உள்ளத்தில் ஊற்றுவதற்காக மனிதனை தனிமைப்படுத்துவான் (கல்வத்). அந்தக் காலப்பகுதியில் அவனை புகழ்ந்தவர்கள் தூற்றுவார்கள், உறவினர்கள் பகைமை கொள்வார்கள்.

உங்களின் பொருட்களிலும், உங்களின் ஆத்மாக்களிலும் திண்ணமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். (3: 186)

முஃமின்களே!) ஓரளவு பயத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள் கனிவர்க்கங்களை ஆகியவற்றின் நஷ்டத்தாலும் திண்ணமாக நாம் உங்களை சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளில்) பொறுமையாளர்களுக்கு (சுவனத்தை கொண்டு) நீர் நன்மாராயம் கூறுவீராக! அல் குர்ஆன் (2:155)

உங்களுக்கு முன்னாள் சென்று விட்டவர்களுக்கு ஏற்பட்டதை போன்று (சோதனைகள்) உங்களுக்கு வராமலேயே, சொர்க்கத்தில் நீங்கள் பிரவேசித்து விடாமல் என்று எண்ணுகிறீர்களா? வறுமையும், பிணியும் (முன்னோர்களாகிய) அவர்களை பிடித்தன. அந்த ரஸுலும் அவர்களுடன் ஈமான் கொண்டவர்களும் “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது (வரும்)” என்று கேட்கும் அளவுக்கு அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்தில் இருக்கிறது. (2: 214)

அந்த நேரத்தில் மனிதனுடைய முழு அன்பும் அல்லாஹ்வை நோக்கியே செல்லும். இந்த தனிமையை இறைவன் ஏற்படுத்துவதற்கு காரணம் தன்னை (இறைவனை) தவிர வேறு யாருடைய அன்பும், அவனுடைய உள்ளத்திற்குள் சென்று விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான்.

அவர்கள் எத்தகையோரென்றால் பொறுமையுடன் இருந்தவர்கள். இன்னும் தங்களுடைய ரப்பின் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள். (29: 59)

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தம் உயிரை விற்று (அதாவது தம்மையே தியாகம் செய்து) விடுகிறவரும் மனிதர்களில் இருக்கின்றார். அல்லாஹ் தன் அடியார்களிடம் மிக்க கிருபையுள்ளவன். (2: 207)

இந்த துன்பங்கள், துயரங்கள், சோதனைகள், தனிமை, எல்லாம் மனிதன் நப்ஸ் அம்மாரா என்ற படித்தரத்தை கடந்து ஆத்ம பரிசுத்தமடைந்து முல்ஹிமா என்ற படித்தரத்தை அடையவேண்டு என்ற காரணத்திற்காகத்தான்.

முஃமின்களே! நீங்கள் பொறுமையை கடைபிடியுங்கள், (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள். (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல் குர்ஆன் (3: 200)

முல்ஹிமா என்ற படித்தரத்தை மனிதன் அடைந்தவுடன் உள்ளத்திற்கு அமைதி, நிம்மதி, சந்தோஷம் கிடைத்து விடும். இறைவன் தரும் துன்ப துயரங்களை பொறுமையுடன் சகித்து கொள்பவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான அருட்கொடைகளை அள்ளி வழங்குவான்.

அவர்கள் பொறுமையாக இருந்ததின் காரணத்தால், அவர்களுடைய கூலியை இருமுறை கொடுக்கப்படுவார்கள். (28: 54)


​யா அல்லாஹ் எமக்கு முல்ஹிமா என்ற படித்தரத்தை அடைந்துக்கொள்ளும் பாக்கியத்தை தருவாயாக! ஆமீன்.. ஆமீன்... யாரப்பல் ஆலமீன்.

தொடரும்.......

எழுதியவர் : லெத்தீப் (7-Jun-14, 2:22 pm)
பார்வை : 262

மேலே