விடுமுறைத் தோட்டத்தில்
ஹப்பா! என்னா வெயில்! மண்டைய பொளக்குது. ரோட்டுல மனுஷன் நிம்மதியா நடக்க முடியுதா. சரி, ஜில்லுனு ஒரு தண்ணி பாட்டில் வாங்குனேன். எல்லாரு முன்னாடியும் அந்த பாட்டில தொறந்து மடக் மடக்குனு குடிச்சுக்கிட்டே கொஞ்ச தூரம் தள்ளி வந்துட்டேன். பாட்டில்ல இருந்த தண்ணிய கொஞ்சமா கையில ஊத்தி தலையில தெளிசுக்கிட்டேன். எவ்ளோ சுகமா இருக்கு! என்னதான் நான் சொட்டைனு இவனுங்கல்லாம் கிண்டலடிச்சாலும் இப்புடி வெய்ய காலத்துல தெனமும் தலைக்கு குளிக்குற, நடு ரோட்டுல நின்னு தலைக்கு தண்ணி தெளிக்கிற வசதி இவனுங்களுக்கு எங்க கிடைக்க போகுது!
தலைல தெளிச்ச ஜில்லு தண்ணி நிமிஷத்துல சூடாகி போச்சுப்பா. சரி சரி, கர்சீப்பை எடுத்து துடைசுப்போம்.
“சார், வணக்கம் !”
ஒன்னுக்கு போக அவசரமா ஒதுங்குறவன இழுத்து வச்சு வழி விசாரிக்கிற பேர்வழிங்க இருக்கிற வரைக்கும் நமக்கு எங்கடா தனிமைன்னு ஒன்னு கிடைக்க போகுது!
“ம்ம். சொல்லு வெற்றி, எப்புடி இருக்க?”
“நல்லா இருக்கேன் சார். அத விடுங்க. என்ன சார் இது! உங்க மண்டைக்கே இவ்ளோ வேர்த்துக் கெடக்குது. பாருங்க எம்புட்டு வேர்வைத் தண்ணி. ஆனா பரவால நீங்க ஈஸியா தொடச்சுப்பீங்க. எங்கள மாதிரி ஆளுங்கதான் பாவம். சரி, வர்றேன் சார் பஸ்ஸுக்கு நேரமாச்சு”
புகழ்வது போல பழித்தல்னு ஒன்னு உங்கள மாதிரி ஆசாமிங்க இருக்குறதாலதான்னு நல்லா புரியுதுடா. போற போக்குல கால வாரிட்டு போயுடறீங்க. ஒரு நிமிஷம் சொட்டைத் தலைய நெனைச்சு பெருமைப்பட முடியுதா!
இன்னும் வீடு போய் சேர்றதுக்குள்ள எத்தன பேர்க்கு நான் பொழுதுபோக்குனு தெரியல. இதெல்லாம் கூட பரவால. அன்னிக்கு நம்மள சட்டைய கழட்டி தலையில கட்ட வச்சாலே படுபாவி. அத மறக்க முடியுமா.
“டேய், நாளைக்கு எல்லாரும் தீம் பார்க் போறோம். வாட்டர் கேம்ஸ்லாம் இருக்குடா. காலைல ஆறு மணிக்கே டிபார்ட்மென்ட் வந்துடு. சரியா?”
“ம்ம்.”
அடுத்த நிமிஷம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். ரொம்ப நாளாச்சு ஸ்விம்மிங் கிளாஸ் போய். ஸ்விம்மிங் காப்பை எங்க வச்சேன்னு தெரியல. அத கண்டிப்பா தேடி எடுத்துட்டு போகணும். எப்பவும் தலைல காப் போட்டு இருக்குறேன், நாளைக்கு ஸ்விம்மிங் காப் இல்லனா மானம் போய்டுமே!
இந்த தடவதான் எல்லாரும் சரியா சொன்ன நேரத்துக்கு வந்திருக்காங்க. சரி மச்சான், பையெல்லாம் பின்னாடி போட்டுட்டு வந்துடலாம்டா.
“டேய் எந்திரிடா, அடேய் எந்திரி. சீக்கிரம் வாடா, எறங்கணும். வாடா டிரெஸ்ஸ மாத்திட்டு வந்துடலாம். முதல்ல வாட்டர் கேம்ஸ் போவோம்.”
ஸ்விம்மிங் கிளாஸ் போனதால ஸ்விம்மிங் பனியனும், டிராயரும் போட்டு சூப்பரா ரெடி ஆகிட்டேன். எங்க போச்சு இந்த சனியன் புடிச்ச காப்? கடவுளே! இவ்ளோ நாள் தொப்பி போட்டு மறச்சு வச்சிருந்த என்னோட கபாலம் இன்னிக்கு கச்சேரிக்கு போ போகுதா!
“டேய், போலாம் வாடா”
“இல்ல மச்சான், நீங்க போங்க. நான் வந்துக்கிறேன்”
நல்லா தேடிப்பாத்தாச்சு. இப்புடியே போகவும் முடியாது – நம்ம கூட வந்திருக்குற இந்த கேர்ள்ஸ் காங் நம்மள ஓட்டியே சாகடிச்சுடும். போகாம இருக்கவும் முடியாது – ப்ரோஃபசர் தப்பா எடுத்துப்பார்.
பத்தே நிமிஷம் ரூம்ல இருந்து வெளிய வந்துட்டேன். சட்டைய கழட்டி முண்டாசு கட்டிட்டு போயிட்டேன். என் தோரணைய பாத்து எனக்கே வெக்கமாயிருக்கு.
“ஹேய், நான்தான் உன் ஸ்விம்மிங் காப்பை எடுத்து ஒளி வச்சேன். பட், திஸ் இஸ் எ வெரி நைஸ் ஐடியா”
அப்புடியே உன் தலையில இருக்குற ஒவ்வொரு முடியையும் புடுங்கியே எடுக்கணும்.
“தா.. னா.. னா.. தன நன தா.. னா..” செல்போன் ஒலி.
“ஏங்க, வரும்போது காய்கறி கடையில ஒரு கட்டு கறிவேப்பில, ஒரு கிலோ வெங்காயம் வாங்கிட்டு வந்துடுங்க”
கடைக்காரன் கேப்பான் இப்போ, “என்ன சார், உங்க வீட்லயும் ரொம்ப முயற்சி பண்றாங்க போல. ஆனா முடிய மாட்டேங்குதோ!”
கறிவேப்பில வாங்க என்ன அனுப்பாதன்னு எத்தன தடவ சொன்னாலும் இவளும் புரிஞ்சுக்க மாட்டேங்குறா.
கடவுளே! என் தோட்டத்துல இருந்த செடி(முடி)யெல்லாம் விடுமுறையில போகும்ன்னு நெனைச்சேன். இப்புடி விருப்ப ஓய்வு திட்டத்துல போகும்ன்னு தெரியலையே !