வண்ணக் கனவுகள் பலிக்குதடி கண்ணம்மா

சில்லென்ற காற்று முகத்தில் மோத மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து சோம்பல் முறித்தான் கார்த்திக்.பறவைகளின் காலை நேர இன்னிசைக் கச்சேரியை ரசித்துக் கொண்டே இந்த இனிய நாளைத்தொடங்குவது அவனுக்கு மிகப் பிடித்தமான ஒன்று ..
பல் துலக்கிவிட்டு வந்தவனுக்கு மணக்க மணக்க காபி கொண்டு வந்து தந்தாள்,ஜனனி.இப்போதுதான்
ஜனனிக்கும் கார்த்திக்கிற்கும் திருமணம் முடிந்து ஒரு மாதமாகி இருந்தது .
அந்த அதிகாலை நேரத்திலேயே குளித்து தலையில் மல்லிகை சூடி இருந்த ஜனனி ரோஜாவண்ண காட்டன் சேலையில் ஒரு இளம் ரோஜாவாகத்தான் தெரிந்தாள் கார்த்திக்கிற்கு..
"என்னம்மா எங்க கிளம்பிட்ட ?"என்ற கார்த்திக்கிற்கு பதில் சொல்வதற்குள் ,
"அம்மாடி ! ஜனனி இங்க வாம்மா ஒரு நிமிஷம் இந்த மூடி சரியாகவே மூட மாட்டேங்குது "என்று சமையலறையில் இருந்து தன் மருமகளை அழைத்தார் லலிதா ,கார்த்திக்கின் அம்மா .
கார்த்திக்கிற்கு அம்மா மட்டும் தான்..அப்பா தவறி 5 வருடம் ஆகிவிட்டது .அவனுக்கு எல்லாமே அம்மாதான் .
குளித்துவிட்டு அலுவலகத்திற்கு தயாராகி வந்தவனை "கார்த்திக் ,என்னை அப்படியே எங்க கல்லூரியில ட்ராப் பண்ணிடேன் "என்றாள் ஜனனி .
"இப்போ எதுக்கு காலேஜ் போகணும்?"என்றவனிடம்
"எனக்கு நேற்றோடு லீவ் முடிந்தது ,இன்றைக்கு முதல் நாள் வகுப்பிற்கு போகணும்.புதிய மாணவர்களுக்கு இருக்கற பயம் எல்லாம் குறைக்கணும்,புதுசா பாடம் எடுக்க ஆரம்பிக்கணும்"என்றாள் ஜனனி .
"எனக்கு ஒன்னும் நீ சொல்லித்தர வேண்டாம்,நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் .நான் வேலைக்கு போறேன் ,கை நிறைய சம்பாதிக்கறேன்
அது போக நமக்கு கிராமத்துல நிறைய சொத்து இருக்கு ..அதுவே நமக்கு போதும் "என்று பொரிந்தான் கார்த்திக் .
"திருமணத்திற்கு முன்னால் நான் வேலைக்கு போனேனே ,இப்ப என்னங்க பிரச்சனை ?அதுவுமில்லாம டீச்சிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும் "
என்றாள் ஜனனி .
"நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோ ஜனனி ,எங்க அம்மா கூடவே நீ இருந்து பார்த்துக்கணும் .நீ வேலைக்கு போனா அம்மா ரொம்ப கஷ்டப்படுவாங்க "என்றவனிடம்
"என்னங்க ,நானே எல்லா வேலையும் செய்துட்டு தான் காலேஜ் போவேன்,சாயந்திரம் சீக்கிரமாவே வந்து அத்தையைப் பார்த்துக்குவேன் .இது என்னோட கனவுங்க "என்று தழு தழுத்தாள் ஜனனி .
"நான் சொல்றேன் ,போக வேண்டாம் "என்ற அவனிடம் என்ன பேசுவது என்று விக்கித்து நின்றாள் ஜனனி .
"டேய் கார்த்தி !என்னடா சத்தம் ?"என்று அங்கு வந்த லலிதாவிடம்
"அம்மா ,ஜனனி என்ன சொல்றானா .."என்ற கார்த்திக்கை கையமர்த்திவிட்டு
"எல்லாமே கேட்டுதுடா .ஜனனி நீ தப்பு பண்ணிட்டம்மா !"என்ற லலிதாவின் பதிலால் அதிர்ந்த ஜனனி ,
"அத்தே !"என்றாள் .
"அம்மா ,நீங்க சொல்லுங்க "என்றான் கார்த்திக் .
"நான் சொல்றது சரிதான் ஜனனி ,நீ எதுக்காக கார்த்திக் கிட்ட அனுமதி கேக்கற ?நீ படிச்சிருக்கற. வேலைக்குப் போறதும் போகாததும் உன்னோட இஷ்டம்மா .நீ எதுக்காக அவன்கிட்ட கெஞ்சி நிக்கிற ?அவன் உன்கிட்ட அனுமதி கேட்டானா?"என்றாள் லலிதா..
"அம்மா!! ""அத்தே!!!"என்று ஒரே நேரத்தில் கூவினர் கார்த்திக்கும் ஜனனியும் .
"ஆமாம்டா கார்த்தி !உங்க அப்பா போனதுக்கு அப்புறமா அத்தனை சொத்தை வச்சுக்கிட்டு படிப்பறிவு இல்லாம நான் வெளியுலகம் சரியாத் தெரியாம ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டேன்.ஒரு பொண்ணு கல்யாணமாகி புகுந்தவீடு வந்தா அவளோட ஆசை ,கனவு எல்லாத்தையும் விட்டுடனும்னு எதுவும் இல்லை.மனைவியோட கனவுகளையும் சேர்த்து நேசிக்கறவங்க தான் உண்மையான கணவன் மனைவியா நேசத்தோடு வாழ முடியும் "
"அம்மா ,நீங்க கஷ்டப்படவேண்டாம்னுதான்சொன்னேன் ,மற்றபடி எனக்கு ஜனனி வேலைக்கு போறதில் எனக்கு விருப்பம் தான் "என்ற கார்த்திகைப் பார்த்து
"எனக்கு கஷ்டம்னு நான் சொன்னேனா?நீயாவே ஏன் ஒரு முடிவு எடுக்கறே?உலகத்தில மாமியார் மருமகள் இப்படிதான் இருப்பாங்க ,இருக்கணும்னு எந்தவொரு நியதியும் இல்லை .எனக்கொரு மகள் இருந்தா நான் எப்படி இருப்பனோ அதே மாதிரித்தான் ஜனனி எனக்கு "என்றாள் லலிதா .
"அத்தே !"என்று ஓடி வந்து கட்டிக் கொண்ட ஜனனியை அணைத்துக்கொண்டார் லலிதா..
தனக்கு கிடைக்காத பாக்கியம் மருமகளிற்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்த லலிதாவிற்கு விழியோரமாய்க் கரித்தது .
நடப்பது கனவா நனவா என்று யோசித்துக் கொண்டிருந்த கார்த்திக்கிடம் "சீக்கிரமா சாப்பிட்டு கிளம்புடா ,ஜனனிக்கு காலேஜ்க்கு நேரமாச்சு "என்று விரட்டிய அத்தையைப் பார்த்து மனம் நிறைந்து சிரித்துக் கொண்டிருந்தாள் ஜனனி !!