வாழவிடுங்கள் தமிழை
வாழவிடுங்கள் தமிழை......
அதரங்களில் அசைந்தாடுகிறாய்!-என்
உதிரத்தோடு உறைந்திருக்கிறாய்!
உயிருக்குள் கலந்துவிட்டாய் -என்
உணர்வெல்லாம் நீயாய் இருக்கிறாய்!
கருவிலே கற்றுக்கொண்டேன்;
கன்னித்தமிழே !உன் சுவையிலே எனை மறந்தேன்
கண்மூடி ரசித்தேன்- உன் மீது தீராத
காதல் கொண்டேன்..
பள்ளிப்படிப்பில் உனை பற்றிக்கொண்டேன்
பற்றிய கைகளில் என் உள்ளம் பறிகொடுத்தேன்
வண்ணத்தமிழே! எந்தன்
வாழ்வுக்கு அழகை நீ அள்ளித்தந்தாய்!
நீ! உயிருக்குள் உரமூட்டினாய்! என்னை
உயர்வாக்கி உருவாக்கினாய்!எந்தன்
உணர்ச்சிகளுக்கு வடிகாலானாய்!
வார்த்தைக்கு பஞ்சமில்லை-உனை
வாழ்த்துவதற்கு வயதில்லை!
தமிழகத்தில் பிறப்பதற்கு நான்
தவமல்லவா செய்திருக்கிறேன்.
பிரியமான தமிழை
பின்னுக்குத் தள்ளி
ஆங்கில மோகத்தில்
ஆனந்தம் கொள்ளும்
எனதருமை தோழர்களே!
சுவைத்து பாருங்கள்! தேன்
சுவை அறியாமல்
கடன் வாங்கிய மொழியில்
காலத்தை தள்ளுபவர்களே!
நம் தாய்மொழியை நேசியுங்கள்
தரணியிலே தமிழ் வாழ வழி செய்யுங்கள்!