குருட்டு விருட்சம்

குருட்டு விருட்சம்

ஒரு மச்ச நிழலாய்
மனப் பொந்தில்
உலவியது நீயானால்
நானோ
இமைமூடி சருகாகிறேன்
உன்னில்
இடறிவிழும்
குறும்பொழுதும்
குறும்புகளாய்ப் பொதிந்திட ..

அகால மரணத்தில்
விழிபிதுங்கும்
இரவொன்றின் - நீலம்
பூத்த கண்களில்
சிந்தும் விழிநீரும்
துளி விடமாய்
உருண்டோடும் இறுதிக்
கோரிக்கையில்
நெடிய முட்களின்
ரேகைப் படிவங்களாய்
காய்கின்றது - தேங்கிய
உள்ளார்ந்த வருத்தங்கள் …

அன்றொரு நாள்
அருகிலிருந்ததாய்
சப்த நாடிகளில்
அரும்பரும்பாய் துளிராகி
சதிராடுகின்றது
விழுங்கிய நாதமொன்றின்
நர்த்தன நவரசங்கள்....

எதற்கும்
இருக்கட்டுமென
இடைவெளி வளர்த்து
உயிர்வழி சுருக்கி
மயங்கிய மலரொன்றை
அடையாளப்படுத்தி
பொன் மோகனங்களால்
முறுவலித்து
முதலாயிரம் கோபங்களில்
தழும்பும் குவளையால்
உயிரூற்றி
வலியால் வேலியிட்டுக்
காவலானாய் அதிரூபனே ….!

விடிந்தால்
இதுவல்ல மோசம்
கனியாத காதலுக்காய்
கருவறை சுமக்க
மறுஜென்மமும் நீட்டிப்பாயோ.......?!

ஒரு அசட்டு
கௌரவத்தைப்
பிடியாய்க் கொண்டு
குடைவிரிக்கின்றது
கோடைக்கால வீதிகள்
நிழல் பருகும்
வெளிச்சத்தில் மிதிபடும்
உணர்வேதம்
விளங்கிக் கொண்டதாய்
விலகுவதில்லை - இந்த
யோகக்கலை.....

மிகப் பழையதாய்
கானகமொன்றில் கண்டெடுத்த
அரும்பொருளாய்
காதல் கிரணங்கள்
வழிந்தோடச்
சிதறிய பௌர்ணமித்
தூரிகைகள்
தனிமையாக்குகின்றது
முனகல் ஓவியமொன்றின்
சுவாசத்தை ….

சித்தப் பிரம்மையாய்
சுவரோரங்களில்
ஊறித் திரிகின்ற – கௌளி
சொல்லுக்குக்
காத்திருக்கும் அற்பமும்
ஆனவரை
சுவைத்துப் பார்க்கும்
சுகத்தில்
அறை முழுதும்
நிறைகின்றது - குருட்டு
விருட்சத்தின் விழுதுகள்...........!

எழுதியவர் : புலமி (18-Jun-14, 12:40 am)
பார்வை : 108

மேலே