நிசப்தத்தின் விழிகளில் ---சர்நா
அடர்த்தியாக இருந்த பசுமையை இரண்டாகப் பிரித்தபடி,பாம்புபோல நீண்டு கிடந்த மலைப்பாதையில்,அந்த உயர் ரகக் கார் மலையின் உச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.கொண்டை ஊசி வளைவுகளிலும்,கொஞ்சம்கூட வேகத்தைக் குறைக்காமல் அநாயசமாகப் பறந்துகொண்டிருந்த அந்தக் காரினுள்,மூன்று இளைஞர்கள் இருப்பது தெரிந்தது.வனத்திற்குள் இருந்து வந்துகொண்டிருந்த விதவிதமான பறவைகள்,விலங்குகளின் சப்தம் எதையும் ஊன்றிக் கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பது,காருக்குள் அதிர்ந்து கொண்டிருந்த இசையிலிருந்து தெரிந்தது.
“டேய்..மைக்கேல்..,இன்னும் கொஞ்ச தூரத்திலே வலதுபக்கம் ஒரு மண் ரோடு பிரியும்.அதிலே வண்டியைத் திருப்பிக்கோ..”,
ஜேம்ஸ் சொன்ன மண்சாலை,குண்டும் குழியுமாக இருந்தது.சமீபத்தில் இந்தப்பகுதியில் மழை பெய்திருக்க வேண்டும்.குழியில் காரின் சக்கரங்கள் இறங்கியபோதெல்லாம்,தேங்கியிருந்த நீர் தெறிப்பது தெரிந்தது. வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த மைக்கேல், “ஜாலியா இருக்கறதுக்குன்னு நல்லா கண்டுபிடிச்சீங்க இடத்தை..!” அவன் குரலில் செம கடுப்பு.
அவனது அவஸ்தையை ரசித்து,சிரித்துக் கொண்டே காரின் இருபுறமும் தெரிந்த பசுமையை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் பின்சீட்டிலிருந்த மார்ட்டின்.
சற்று தூரத்தில் அவர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ரிசார்ட் தெரிந்தது.
மாலை ஆறுமணி. கிழக்கில் லேசாக இருள் கவியத் துவங்கியிருந்தது. “அப்பாடா..மூணுமணி நேரப் பயணத்துக்கு,இப்பவாவது விடுதலை கிடைச்சதே..!” என்று ஆளுக்கொரு விதமாய் முணங்கியபடியே, காரிலிருந்து இறங்கிய மூவரும் உடல் அலுப்பைத் தீர்த்துக் கொள்ளும் வண்ணம்,கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டனர்.ஈரக்காற்று,சில்லென்று எலும்புவரை ஊடுருவிப் போயிற்று.மைக்கேலின் கைகள் லேசாக நடுங்கியது போலும்.கைகளைக் குவித்து வாயருகே வைத்து,சூடான மூச்சுக்காற்றை ஊதிக் கொண்டான்.
தூரத்திலிருந்து பார்த்தபோது,அழகாய்த் தெரிந்த அந்த ரிசார்ட்,இப்போது,பெயிண்டெல்லாம் உதிர்ந்து, அழுக்கடைந்து போய்,ஏதோ பாழடைந்த வீடு போல தெரிந்தது.அதன் முன்கதவுக்கு இருபுறமும் இருந்த இரண்டு ஜன்னல்களில் தொங்கவிடப்பட்டிருந்த திரைச்சீலைகள்,காற்றில் மேல்நோக்கிப் பறந்தும்,பின் கீழிறங்குவதுமாக..ஏதோ அழகற்ற மனிதமுகமொன்று,விழிகளைத் திறந்து மூடுவதுபோல,மார்ட்டினுக்குத் தெரிந்தது.விலுக்கென்று தன்னிச்சையாக அதிர்ந்தவன்,கழுத்தில் கிடந்த சிலுவையை எடுத்து முத்தமிட்டுக் கொண்டான்.
சுரேஷ் கவனிக்கத் தயாராகியிருந்தான்.......
அவர்கள் கொண்டு வந்த பொருட்களை எடுப்பதற்காக,கார் டிக்கியைத் திறந்தான் ஜேம்ஸ்.பாய்ந்துவந்த மார்ட்டின்,ஜேம்ஸ் மீது மோதித் தள்ளிய வேகத்தில்,கீழேவிழாமல் ஒருவழியாக சமாளித்து,நின்றான் ஜேம்ஸ்.
இதைப்பற்றி சற்றும் கண்டுகொள்ளாத மார்ட்டின்,டிக்கியிலிருந்த உயர்ரக மதுப்பாட்டில்கள் அடங்கிய சிறு அட்டைப் பெட்டியையும்,தனியாக இருந்த உணவுப் பொருட்களின் பார்சல்களையும் முதல்வேலையாய் அள்ளிக் கொண்டான். “அடப்பாவி இதுக்காகவா..இப்படி மோதித் தள்ளினே..!..நாயி..நாயி..என்று அவனை விளையாட்டாய் அடிக்க கை ஓங்கியபடியே வர..,பார்சல்களுடன் முன்னே ஓடினான் மார்ட்டின்.
விடுறா..அவனோட அவசரம் அவனுக்கு..எப்பவும் அவன் வயித்துக்குத்தான் முதலிடம் கொடுப்பான்..” என்றபடியே முன்னால் வந்த மைக்கேல்,மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.
ஜேம்ஸின் கையிலிருந்த சாவியால்,வீட்டின் முன்கதவைத் திறந்து,உள்ளே அவர்கள் காலடி எடுத்து வைத்ததும் சரேலென சில வெளவ்வால்கள்,ஒன்றன்பின் ஒன்றாக,இவர்களை உரசுவதுபோலக் கடந்து செல்ல,மூவருமே சிலவிநாடிகள் துணுக்குற்றனர்.
மூன்று படுக்கையறைகள் கொண்ட அந்த வீட்டை,சமீபத்தில் சுத்தப்படுத்தியிருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. முன்கதவைத் திறந்தவுடன் எதிர்ப்படுகிற ஹாலிலும்,அங்கிருந்த மேசை நாற்காலிகளின் மீதும் தூசியும், வெளவ்வால்களின் எச்சமும் அப்பிக்கிடந்தன. ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த கண்ணாடி,அதன் பளபளப்பை இழந்து ‘டல்’லடித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த பெரிய டிவியின் மீது படிந்து கிடந்த தூசியில்,எவனோ மரியா என்று எழுதி,ஒரு இதயமும் வரையப் பட்டிருந்தது. “தூ..காதலைச் சொல்றதுக்கு கிடைச்ச இடத்தைப் பாரு..!” ஜேம்ஸின் குரலில் சலிப்பு.வீட்டைச் சுற்றி நோட்டமிட்ட மூவருக்கும் வரும்போது இருந்த உற்சாகமே குறைந்துபோனது.
“லைட்டுகளாவது எல்லா அறையிலும் எரியுமா..? டேய் மார்ட்டின்.., போய் எல்லா ரூமிலேயும் லைட்டுகளைப் போடு,தண்ணீர் வருதான்னும் பாரு..” ஜேம்ஸ் கத்த,மார்ட்டினும்,மைக்கேலும் அறைகளுக்கு ஓடினர்.
அப்பாடா..அதிலொன்றும் சிக்கலில்லை.
டேய்..நம்மளை நல்லா ஏமாத்திட்டானுகடா..மார்ட்டின் புலம்பிக் கொண்டே வந்தான்.
அதுவொரு தனியாருக்கு சொந்தமான ரிசார்ட்.அவர்களின் இணைய விளம்பரத்தில் காண்பிக்கப்பட்ட வனப்பகுதியின் பசுமை,அருவிகள்,விலங்குகள், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதியின் புதுமெருகு குறையாத அழகு..டிஷ் ஆன்ட்டெனாவுடன் பெரிய டிவி,ஆகியவற்றைப் பார்த்து,இந்த வார விடுமுறையை அங்கே கழிக்கலாம் என்று,ஆன் லைனில் புக் செய்துவிட்டு,அவர்களின் நகர அலுவலகத்தில் சாவியைப் பெற்றுக் கொண்டு இங்கே வந்திருக்கின்றனர்.
ஜேம்ஸ்,“பாவிப்பசங்க..சாவியைக் கொடுத்து,வழியைச் சொல்லும்போதாவது,கொஞ்சம் வசதிக்குறைவாத்தான் இருக்கும்..னு சொல்லக்கூடாது”.
“சரி..சரி விடு.., இங்க பால்கனியிலேயிருந்து பாத்தா,சீனரி எல்லாம் பியூட்டிபுல்லா இருக்கு,மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு..” மைக்கேல் ஆறுதல் படுத்தினான். அவர்களும் வந்து பார்த்தனர்.அந்த வீடு,அவர்கள் சுற்றிச்சுற்றி பயணித்து வந்த மலையிலிருந்து சரேலென கீழிறங்கத் துவங்கும் ஒரு பள்ளத்தாக்கின் நுனியிலிருந்தது. எதிரிலும், பக்கவாட்டிலும் தெரிந்த மலைகளிலிருந்து ஆங்காங்கே வழியும்,சிறிதும் பெரிதுமான அருவிகள்,மாலை மயங்கும் நேரத்தில் அழகான ஓவியங்களாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.செயற்கையாய் மனிதன் செய்து வைத்த எதுவும்,நாளடைவில் பொலிவு குன்றிப் போகலாம். ஆனால், இயற்கை எப்போதுமே தனது பொலிவை அதிகப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறதோ..?
இப்போது அவர்களிடையே சில நிமிடங்களாக மௌனம் நிலவிக் கொண்டிருந்தது.கண்முன் தெரிந்த அழகில்,மூவரும் மனதைப் பறிகொடுத்திருக்க வேண்டும்.
மார்ட்டின்தான் சட்டென்று மவுனத்தைக் கலைத்தான்.அந்த டைனிங் டேபிளை இங்க இழுத்துட்டு வந்து போட்டுக்கலாம். இப்படியே சீனரிகளைப் பாத்துட்டே, சாப்பிடலாம்..!”
நண்பர்களுக்கும் அது நல்ல ஏற்பாடாகவே தெரிந்தது.ஹோ..ய்;..,அங்கே உற்சாகம் தொற்றிக் கொண்டது.
ஆளுக்கொரு அறையில் நுழைந்து,குளித்துவிட்டு வெளியே வந்த நண்பர்கள்,முன்கதவை சாத்தித் தாள் போட்டுவிட்டு,அவர்கள் திட்டப்படியே பால்கனியில் அமர்ந்து மதுவகைகளையும் உணவையும் சுவைக்கத் தொடங்கிவிட்டனர்.
வெளியே..தொட்டால் ஒட்டிக் கொள்ளும் அடர்த்தியான,கறுப்போடு இருள் பரவிக் கொண்டிந்தது.பெயர் தெரியாத விலங்குகளின் விதவிதமான சப்தங்களுடன், ஒற்றை யானையின் பிளிறல் சப்தம் ஒன்று மிக அருகாமையில் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது.மாலையில் இருந்ததைவிட, இப்போது குளிரின் அளவும் அதிகரித்திருந்தது.
இந்தத் திகிலான சூழல் எதையும் அனுபவிக்கும் மனநிலையில் இல்லாத நண்பர்கள்,உள்ளூர் காதல் முதல் உலக அரசியல் வரை பேசிக்கொண்டே, தங்கள் முன் இருந்த மதுப்புட்டிகளில்,பாதியளவைத் தீர்த்திருந்தார்கள்.இப்போது அவர்களுக்கு மிதமான போதையும் ஏறியிருந்தது.
திடீரென எழுந்த மார்ட்டினை நோக்கி,ஜேம்ஸ் என்னவென்று கேட்க,விரலால் சைகை காட்டிக் கொண்டே கழிப்பறையை நோக்கி,ஏறக்குறைய ஓடினான்.இவர்களின் பேச்சு தொடர்ந்தது.
சிலநிமிடங்கள் கழித்து வந்த மார்ட்டின்,தனது குப்பியிலிருந்த மீதி மதுவைக் காலிபண்ணிவிட்டு,“என்னோட காதலி எனக்கு போன் பண்ணவேயில்லை. அவளுக்கு நான் எங்காவது தொலைந்தால் போதும்,ரொம்ப சந்தோஷப் படுவாள்..”
மைக்கேலுக்கும்,ஜேம்ஸுக்கும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. “உலகத்திலேயே வெச்சு இவங்கதான் அதிசயமான காதலர்கள்..ஹஹ்ஹா..ஹஹ்ஹ்ஹா..!” மலைப்பிரதேசத்தின் அமைதியைக் கலைத்து, அவர்களின் சிரிப்பு எதிரொலித்தது.
அதே நேரத்தில்,வீட்டின் ஹாலுக்குள் யாரோ சிலர் மிக இரைச்சலாய்ப் பேசும் சப்தம் கேட்டது.‘யாரடா அது அழையா விருந்தாளி..?’ மைக்கேல் எட்டிப்பார்த்தான். ஹாலின் முழுப்பரப்பும் தெரியவில்லை. “பிரைவசி வேணும்னு,கண்காணாத இடத்துக்கு வந்தாலும்,தொல்லை குடுக்க எவனாவது வந்துறானுங்க..சே..!” மெதுவாய்,எழுந்து ஹாலை நோக்கித் தள்ளாட்டத்துடன் நடந்தான் மைக்கேல்.
ஹாலில் இருந்த பெரிய டிவியில் டிடிஎஸ் எபெக்டில் ஏதோவொரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் எவனோ இரண்டுபேர்,தங்களுக்கு முன்பு மதுப்புட்டிகளை வைத்துக் கொண்டு,கத்திப் பேசிக் கொண்டிருந்தனர்.
மைக்கேலுக்கு பயங்கரமாகக் கோபம் வந்துவிட்டது.விறுவிறுவென்று போய் டிவியை அணைத்தவன்,அந்த வேகம் குறையாமல்,பால்கனிக்கு வந்தான்.டிவி அணைந்தபின் ஸ்க்ரீனில் நிலைத்த இருவிழிகள் அவன் போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சுரேஷ் தண்ணீர் குடித்தான்....................
வெகு சுவாரஸ்யமாய்,தனது அடுத்த ரவுண்டுக்கான மதுவை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த மார்ட்டினை நோக்கி, “ஏண்டா..உனக்கு கொஞ்சம்கூட அறிவில்லையா..? டிவியை ஆன் பண்ணிவெச்சுட்டு இங்க வந்துட்டே.வரும்போது அதை ஆப் பண்ணிட்டு வரணும்னு தோணலையா..? இப்ப நான் போய் ஆப் பண்ணிட்டு வரவேண்டியதிருக்கு.. ” நிம்மதியாய் உட்கார்ந்து தனது போதையை அனுபவிக்கமுடியவில்லையே என்ற அங்கலாய்ப்பும், ஆத்திரமும் அவன் குரலில் கொப்பளித்தது.
மைக்கேலின் பேச்சைக் கேட்ட மார்ட்டினுக்கும் இப்போது தாறுமாறாய் கோபம் வந்துவிட்டது.“நீதான் அறிவு கெட்டத்தனமாய்ப் பேசிகிட்டு இருக்கே..நான் எங்கேடா டிவியை ஆன் பண்ணினேன்.எல்லோரும் ஒண்ணாத்தானே இங்க வந்தோம்..இடையிலே நான் டாய்லெட்டுக்கு ஒருமுறை போய்ட்டு வந்தேன். அவ்வளவுதான்.நான் டிவியைப் போட்டிருந்தா அப்போதிருந்தே சத்தம் கேட்டிருக்கணுமே..?”
ஜேம்ஸுக்கு ஏதோ விபரீதமாகப் பட்டது. “மைக்கேல்..,முன்னாடி கதவு பூட்டித்தானே இருக்கு..?”. “ஆமா..பூட்டித்தான் இருக்கு.நான்தானே.. பூட்டிவிட்டு.. வந்தேன்..” மைக்கேல் அந்த வாக்கியத்தை முழுதாகச் சொல்லி முடிக்குமுன்பே,அவனும் ஏதோ விபரீதத்தை உணர்ந்திருக்க வேண்டும். இரண்டாவது முறையாக தனக்குள் முனகிக் கொண்டான்..‘நான்தானே பூட்டிவிட்டு வந்தேன்..அப்புறம் யார் உள்ளே வந்து டிவியைப் போட்டிருக்க முடியும்..?’, மைக்கேலின் முகம் வெளுத்தது துல்லியமாய்த் தெரிந்தது.
“ஹஹ்ஹஹா போங்கடா பயந்தாங் கொள்ளிகளா..! எவனாவது டிவியைப் பாத்துட்டு இருக்கும்போது,கரெண்ட் போயிருக்கும்..இப்ப கரெண்ட வந்தவுடன் டிவி ஆன் ஆகியிருக்கும்.இதுக்குப் போய்..ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கானுக..ஹஹ்ஹா ஹஹ்ஹா..” மார்ட்டின் வெடிச்சிரிப்புடன் சொல்ல..,ஒருவேளை அப்படியும் இருக்குமோ..? ஜேம்ஸுக்கும்,மைக்கேலுக்கும் இப்போதுதான் சற்று நிம்மதி வந்தது.
“ஆமா..ஆமா..அப்படித்தான் இருக்கும்..” என்று இருவரும் கோரஸாய் சொல்ல,மார்ட்டின் அவர்களை நோக்கி, “சரி சரி தொடை நடுங்காம உட்கார்ந்து,கண்டின்யூ பண்ணுங்கடா..ஃபூல்ஸ்..”என்ற படியே அவனது கோப்பையில் மீண்டும் மதுவை சரித்தான்.
சரியாக அந்த விநாடியில்,மீண்டும் டிவி தானாகவே ஓடத்துவங்கி,அதே பேச்சுக்குரல்கள் சப்தமாகப் பேசிக் கொண்டிருந்தன. நண்பர்கள் மூவரும் அதிர்ந்துபோய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மூவருக்கும் இதுவரை ஏறியிருந்த போதை எங்கே போனதென்றே தெரியவில்லை. கோப்பையில் சரித்த மதுவை ஏனோ மார்ட்டின் தள்ளிவைத்து விட்டான். அவனது கைகள் தன்னிச்சையாக கழுத்தில் கிடந்த சிலுவையை இறுக்கிப் பிடித்துக் கொண்டது.
மூவரும்,இப்போது தங்களுக்குள் கைகளைக் கோர்த்துக் கொண்டு,மெதுவாய் ஹாலில் உள்ள டிவிக்கு அருகில் வந்தனர்.மார்ட்டின் சொன்னதுபோல,ஒருவேளை டிவியில் ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாய் இருந்துவிட்டால் பரவாயில்லை. இல்லையென்றால்,இதனை நாம் எப்படி எதிர் கொள்வது..? என்றே மூவரின் மனதிலும் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.‘இன்னும் சற்று அருகே நெருங்கி பரிசோதிக்கலமா..?’ திரும்பிப் பார்த்த மைக்கேலின் எண்ணம் ஜேம்ஸுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவனும் கண்களாலேயே ஆமோதித்தான்.
மைக்கேல் ஓரடிதான் எடுத்து வைத்திருப்பான்.ஓடிக் கொண்டிருந்த டிவியில் பேசிக் கொண்டிருந்த இரண்டு மனிதர்களும்,ஒரேசமயத்தில் திரும்பி இவர்கள் மூவரையும் பார்த்தனர்.அதில் தாட்டியாக இருந்த ஒருவனின் கண்களில்,மிகவும் ஆத்திரம் தெரிந்தது. நண்பர்கள் மூவரும் அதைக் கண்டு துணுக்குற்றபோதே, “யூ..யூ.. நான்சென்ஸ்..கெட் அவுட் ப்ரம் மை ஹவுஸ்..!” அவன் கத்திய கத்தலில் அந்த ஹாலே அதிர்ந்தார்ப் போலிருந்தது.
மின்சாரம் தாக்கியதைப்போல,நண்பர்கள் மூவரும் துள்ளிப் பின்னால் விழுந்தனர்.மார்ட்டினுக்கு மயக்கம் வரும்போல இருந்தது. அவனது கண்கள் நெட்டிக்கொண்டு,மேலே போய்விட்டன.தொடர்பில்லாமல் ஏதோ அவன் உளறவும் தொடங்கியிருந்தான்.
டிவியில் இருந்து,இவர்களை முறைத்துப்பார்த்தபடி,இன்னும் ஏதோ கெட்ட வார்த்தையில் முனகிக் கொண்டிருந்த குண்டனிடம்,அவனுடன் இருந்த,குறுந்தாடியைக் கொண்ட மெலிந்தவன்,ஏதோ மெதுவாகச் சொல்வது தெரிந்தது. “ஊம்..அப்படியா..சரி..சரி..”என்று ஆமோதித்த குண்டன்,மெதுவாய் திரும்பி நடக்க,படக்கென்று அணைந்து போனது அந்த டிவி.
“மைக்கேல்..இது என்ன கனவா..நனவா..? எப்படி இப்படியெல்லாம் நடக்குது.ஒண்ணுமே புரியலையே.., இனியும் நாம இங்கிருப்பது சரியாகாதுன்னு தோணுது.உடனே இங்கிருந்து கிளம்பிடலாமா..?” ஜேம்ஸின் வார்த்தைகள் தந்தியடித்துக் கொண்டிருந்தன.முவரின் முகத்திலும் பயரேகைகள் தாறுமாறாய் ஓடிக் கொண்டிருந்தது.
“ஏதாவது நடக்குறதுக்குள்ளே நாம இந்த இடத்தைக் காலி பண்ணுறதுதான் சரி..”
“ஆமா..அதுதான் சரி..என்று அறைகளுக்குள் ஓடிப்போய்,தங்கள் உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, மூவரும் கதவை நோக்கி ஓடினர்.ஜேம்ஸ் மிகப் பதட்டமாக,தன்னிடமிருந்த சாவியை நுழைத்து, பூட்டைத் திறந்துவிட்டு, கதவை இழுத்தான்.கதவு திறக்கவில்லை.பலமுறை இழுத்துப் பார்த்தும் திறக்க முடியவில்லை. மேலும் அவன் பதட்டமானான்.
அவன் தடுமாறுவதைக் கண்ட மைக்கேல்,அவனை நகரச் சொல்லிவிட்டு,கதவைத் திறக்க முயற்சிக்க.. ஊஹூம்..பயனில்லை.கதவுக்கு அந்தப்பக்கம் யாரோ பலமாய் சிரிக்கும் சப்தம் கேட்டது.சட்டென்று இருவரும் பின்னோக்கி நகர்ந்தபோது,சொத சொதவென்ற ஈரத்தில் கால்பட்டது.என்னவென்று புரியாமல்,நிமிர்ந்தபோது, தங்களுக்கு மிக அருகே நின்றிருந்த மார்ட்டினின் பேண்ட்,முழுக்க நனைந்திருந்தது.சட்டென்று அவனையும் இழுத்துக் கொண்டு,ஹாலுக்கே வந்தனர்.அங்கிருந்த நாற்காலிகளில் அனிச்சையாக அமரமுயல, மார்ட்டின் நாற்காலியை சற்று இழுத்து ஜேம்ஸுக்கு மிக அருகில் போட்டுக் கொண்டான்.
‘இப்போது எப்படி இங்கிருந்து வெளியேறுவது..?’அவர்களின் மனம் முழுக்க ஒரே கேள்விதான்.யாரும் பேசிக்கொள்ளவில்லை. ‘யாராவது ஒருவர் சரியான பதிலைச் சொல்லவேண்டுமே.சரியான வழியைக் காட்டவேண்டுமே..!’என்று மூவருமே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகப் பட்டது.
கனத்த அமைதியுடன் நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தன.வனத்தினுள் இருந்துகூட இப்போது எந்த சப்தமும் இல்லை.‘இதுதான் மயான அமைதியா..?,நேரம் எவ்வளவு ஆயிற்று என்றே தெரியவில்லை. நள்ளிரவைக் கடந்திருக்குமோ..? இப்போது என்ன செய்வது..?’ சிலுவையை இறுக்கிப் பிடித்திருந்த மார்ட்டினின் கைகளில் வியர்வையின் பிசுபிசுப்பு.இதென்ன குளிர் நிலவும் மலைப்பகுதியில் வியர்வையா..? நமக்கு மட்டும்தான் பயத்தில் இப்படியாகிறதா..? சந்தேகத்துடன் பார்த்தபோது மைக்கேலும்,ஜேம்ஸும்கூட வியர்த்து வழிந்து கொண்டிருப்பதை,அவர்களின் முதுகோடு ஒட்டிக் கொண்டிருந்த சட்டைகள் காண்பித்துக் கொண்டிருந்தன.
மேலும் சில நிமிடங்கள் மௌனமாய்க் கழிய,அறைக்குள் நிலவிய வெப்பத்தை மற்றவர்களும் உணர்ந்திருக்க வேண்டும்.மார்ட்டினை நோக்கி மெதுவாகத் திரும்பிய ஜேம்ஸ்,அவனுக்கு அருகாமையிலிருந்த மின் விசிறியின் சுவிட்சைப் போடு..என்று கண்களால் ஜாடை காட்ட,ஊஹும்..என்று மறுத்து தலையாட்டினான் மார்ட்டின்.
அதேசமயம்,மைக்கேல் எழுந்து சென்று ஹாலில் இருந்த இரண்டு ஜன்னல்களை திறக்க ஒரு கை மட்டும் கீழிருந்து மேலெழுந்து அவன் கையை தீண்டியது. அதற்குள் திரும்பியவன்,உடனே ஜன்னல்களைத் திரும்பிப் பார்த்தான். ‘ஜன்னல்களைத் திறந்தபோது,யாரோ தனது கையைப் பற்றி,வெளியே இழுக்க முயற்சித்தது போல இருந்ததே..ஒருவேளை பிரமையோ..? பிரமையாக இருந்தால்,யாரோ தனது கைகளைத் தொட்டு,இழுத்த ஜில்லிப்பை எப்படி உணரமுடியும்..? இதோ இப்போதும் அந்த ஜில்லிப்பை கைகளில் உணர முடிகிறதே..!’ அவன்,ஜன்னல்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்து பழையபடியே அமர்ந்து கொண்டான்.சில விநாடிகள் கழித்து,மீண்டும் ஜன்னலைப் பார்க்க,சிதைந்த முகத்துடன் ஒரு உருவம்,மெதுவே இவனைப் பார்த்து அகோரமாக சிரித்தபடி,ஜன்னலை சார்த்திக் கொண்டிருந்தது. அந்த கைகள் அந்த உருவத்துடன் இணைந்திருக்கவில்லை. அதிர்ந்தவன் கைகளில் இருந்த ஜில்லிப்பு, அவனது மனதுக்குள் ஏற ஆரம்பித்திருந்தது.
ஜேம்ஸ் எழுந்து சுவிட்சைத் தட்ட,மின்விசிறி சுழல ஆரம்பித்து மெதுவாய் வேகமெடுத்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ பறந்துவந்த ஒரு கற்றை முடி,ஜேம்ஸின் முகத்தில் வந்து பட்டு மெதுவாய் காற்றில் ஆடிக் கீழே விழுந்தது. “தூ..இதென்ன...இவ்வளவு முடிகள்..?..என்று முனகிய ஜேம்ஸின் மேலே பார்க்க, அருகிலிருந்த மைக்கேலின் கண்கள் உறையத் தொடங்கியது. மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியிலிருந்து மேலும் சில கற்றை முடிகள் ஒரு விழுது போல கொட்ட ஆரம்பித்திருந்தன. ஏய்..மேலே பாரு.. மைக்கேல் கத்திய விநாடியில்,மேலே பார்த்த ஜேம்ஸின் தலைமீது,யாரோ திடுமென்று கொட்டியதுபோல, ஏராளமான முடிக் கற்றைகள் முன்னும் பின்னும் கொட்டத்துவங்கின.
விலுக்கென்று அதிர்ந்து பின்வாங்கிய ஜேம்ஸ் மீது மீண்டும், மீண்டும் முடிக் கற்றைகள் கொட்டி அவனை ஒரு மூட்டையாக சுற்ற ஆரம்பித்தது.சில விநாடிகளிலேயே அந்த அறையின் தரையெங்கும் அடர்த்தியாய் நிறைந்தது முடிகள். மார்டினும், மைக்கலும் நகர முயல ஹாலின் வெளிச்சமே மங்கிப் போய்,இருளடைந்தாற்ப் போல ஆயிற்று. இன்னும் வேகமெடுத்து சுழன்ற மின்விசிறியின் காற்றில் முடிகளும் சுழன்று,பறந்து விதவிதமாய் அலைக்கழிந்து கொண்டிருந்தது.அந்த அலைச்சல்களிடையே உடலும்,முகமும் சிதைந்துபோன பல்வேறு மனித உருவங்களும் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. அதில் சில உருவங்களின் கைகள் அடிக்கடி நீண்டு வந்தன.இரண்டு விழிகள் ரத்தம் சொட்டிக்கொண்டு அங்கும் இங்கும் அவர்களுக்கு மத்தியில் அவர்களை கவனித்தவாறே சுழல, நண்பர்கள் மூவரும் இருந்த இடத்திலிருந்தே குனிந்தும்,பின்னால் சாய்ந்தும்,குதித்தும் தப்பித்துக் கொண்டேயிருந்தனர்.
அடர்த்தியான இருளைப்போல பரந்து, அந்த அறையை நிரப்பிக் கொண்டிருந்த முடிகளின் ஊடே, அந்த டிவி தானாகவே,மீண்டும் ஓட துவங்கியிருந்தது. அப்போது தெரிந்த அதே இரண்டு மனிதர்களுடன் வேறு சிலரும் கூட்டமாகச் சேர்ந்து நின்று கொண்டு,இவர்களைப் பார்த்து சத்தமாகவும்,கேலியாகவும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
நண்பர்கள் மூவரும்,களைத்து திணறித்தான் போனார்கள்.ஆனால், பயமும், பதட்டமும் அவர்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. மூச்சுத் திணறி, நெஞ்சை வலிப்பது போலவும் இருந்தது. மார்ட்டினால் அந்த வேதனையைத் தாங்கவே முடியவில்லை. “இதற்கொரு முடிவே இல்லையா...ஜீசஸ்..என்னைக் காப்பாற்று..” என்று அலறியே விட்டான். அந்தக் கத்தல்,அந்தப் பிரதேசத்தையே நடுக்கமுறச் செய்திருக்க வேண்டும்.அதிர்வலைகள் தாக்கியதோ என்னவோ.,அந்த அறையிலிருந்த மின்விளக்கு திடீரென வெடித்துசிதற,வெளியே அடர்த்தியாய் இருந்த இருள்,விசுக்கென்று அந்த அறைக்குள் நுழைந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அணைந்த டிவி ஸ்க்ரீனில் நிலைத்த இருவிழிகள் அவர்களையே உற்றுப் பார்க்கத் தொடங்கியது.
விழிகளை விழிகளில் வாங்கிய சுரேஷ் சற்று சிலிர்த்திருந்தான் பொடனியில்....
அதே விநாடியில்,பெருத்த இடியோசை போலக் கேட்ட சப்தத்தைத் தொடர்ந்து, அதுவரை இறுக்கமாக மூடியிருந்த முன்கதவு,படீரென்று திறந்தது. ஓடிக்கொண்டிருந்த டிவியின் மங்கலான வெளிச்சத்தில் வாசல்படியருகே தெரிந்தது ஒரு மெலிந்த பெண்ணுருவம்.“டேய்..,உங்கிட்டே எத்தனை முறை சொல்லியிருக்கேன். சைலண்ட் மோடுலே டிவியைப் பாக்காதேன்னு..,அப்புறம் அப்படியே தூங்க வேண்டியது.கரெண்ட் பில் கட்டும்போதெல்லாம் உங்கப்பாகிட்டே நாந்தான் பாட்டு வாங்க வேண்டியதிருக்குது. பேசாம ஆப் பண்ணிட்டு மரியாதையா படு..” அம்மாதான் வழக்கம்போல இன்றைக்கும் திட்டிவிட்டுப் போனாள்.
ஆங்கில எழுத்துக்களினாலான சப் டைட்டிலுடன்,சைலண்ட் மோடில் ஓடிக் கொண்டிருந்த டிவியை அணைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான் சுரேஷ். ‘நாளைக்கு எப்படியாவது யூ ட்யுபில் இந்தப் படத்தோட கிளைமாக்ஸைப் பாத்துடனும்’ என எண்ணியவாறே.....
------முற்றும்------
===============================================================================================================
அன்பிற்கினிய தோழர்."பொள்ளாச்சி அபி B+ve " அவர்களின் உதவியோடும், திருத்தங்களோடும் என் இரண்டாவது கதை.
அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்......