புலி
வானின்று தரைவந்து நடந்த வெண்ணிலவொன்று,
நீராட வருகையிலே கண்டதென் கண்ணின்று;
ஆணொருவன் இருப்பதை அறியாத பேதையாய்,
நங்கையவள் நதிநீரில் மென்பாதம் இறக்கிட்டாள்;
நீராட மேலாடை தடையென்றொ என்னவோ,
மெய்மறைத்த மெல்லாடை சட்டென்று விலக்கிட்டாள்;
அவள்கொண்ட பெண்மைதனை உள்ளாடை மறைத்துநிற்க,
இமைக்காத கண்ணிரண்டை வலிந்துநான் திருப்பிட்டேன்;
அந்நியரின் அந்தரங்கம் அறிவதழ கல்லவென்று,
அமர்ந்திருந்த பாறைவிட்டு எழுந்துசெல்ல முற்பட்டேன்,
வெகுஅருகில் வேங்கையொன்று அவளின்பின் வந்துநின்று,
பாயக்குறி பார்ப்பதைக் கண்டுநானும் திடுக்கிட்டேன்;
தலைகாலும் புரியாமல், செய்வதொன்றும் அறியாமல்,
இடையிருந்த உடைவாளை வலக்கையால் உருவிட்டேன்;
வேகமாக நான் குதிக்க, அசாத்தியத் துணிவுதிக்க,
பாய்ந்துவிட்ட புலியின்முன் நான்பாய்ந்து தடுத்திட்டேன்;
புலியும்நானும் சேர்ந்துருள, சலசலப்பு தான்நிகழ,
திடுக்கிட்ட பேரழகி அதிர்ந்து தலை திருப்பிட்டாள்;
இருபுலிகள் நதிக்கரையில் போர்புரியக் கண்டவள்,
நொடியில்நிலை புரிந்துகொண்டு விரைந்துகரை திரும்பிட்டாள்;
தரைமேலே நான்கிடக்க, எந்தன்மேல் புலிகிடக்க,
இருகரங்கள் ஒருசேர்த்து புலிக்கழுத்தை நெறித்திட்டேன்;
வலிதாங்கா புலியதுதான் உறுமலுடன் வெறிசேர்த்து,
கால்நகத்தால் மார்கீற வலியில்நான் துடித்திட்டேன்;
உறுமலால் காதிரைய உள்நெஞ்சில் பயம்நிறைய,
கழுத்திருந்த கைவிலக்கி வாளைநான் சுழற்றிட்டேன்;
நெஞ்சைஇரும் பாக்கிக்கொண்டு, கண்ணிரண்டும் மூடிக்கொண்டு,
கையிருந்த வாள்தன்னை புலிவயிற்றில் புகுத்திட்டேன்;
முன்வழிப் புகுந்தநுனி முதுகில்வெளி நீட்டிநிற்க,
இறுதியான உறுமலுடன் புலியும் தரைசரிந்தது;
தன்னுடலில் துளைதாங்கி புதுக்காதல் துவக்கிவைத்த,
பெருமிதத்தைத் தாங்காமல் புலியினுயிர் பிரிந்தது.