அடியேனின் அரசி

காற்றிடம் கேட்டால் கூறிடுமோ?
என் காதலி அவளின் குழலகை;
வீசும் தென்றல் பாடிடுமோ?
என் தேவி அவளின் திருமொழியை;
மேகக் கூட்டம் வரைந்திடுமோ?
என் மேனகை அவளின் மேனியதை;
நீள்நெடு நதியும் நெளிந்திடுமோ?
என் நாயகி அவளின் இடைநெளிவை;
கங்கை மீனும் காட்டிடுமோ?
என் கயல் விழியாளின் கண்ணழகை;
வெண்ணில வதுவும் ஒத்திடுமோ?
என் ஏந்திழை அவளின் இன்முகத்தை;
பசுமரச் சோலை பகர்ந்திடுமோ?
என் செம்பொன் சிலையின் செழுவனப்பை;
வைரமும், முத்தும் பெற்றிடுமோ?
என் சிங்கார அருவியின் சிரிப்பொலியை;
மல்லிகை, முல்லை வீசிடுமோ?
என் வசந்த வருகையின் வாசனையை;
சந்திரப் பிறையும் பொருத்திடுமோ?
என் நங்கை அவளின் நெற்றியதை;
அலர் வீதிகளும் தொடத்தகுமோ?
என் அரசிளங் குமரியின் அழகடியை.

எழுதியவர் : jeany (23-Jun-14, 12:35 pm)
சேர்த்தது : jeany
பார்வை : 51

மேலே