எதைத் தேடி - வினோதன்

ஓய்வுகளில் கூடுகளை
உடைத்து மிதித்தபடி
ஓடிக் கொண்டிருக்கிறோம்,
எங்கென்று தெரியாத
ஏதோ ஓரிடத்திற்கு !

இணையத்தோடு
இணைந்தே இருக்கிறோம்
இதயங்களை மறந்து விட்டு !

கூட்டமாய் இருந்தும்
தனித்தனி தீவுகளாய்,
நாகரிக ஈவுகளாய் !

வயிற்று வேண்டுகோள்
நாவின் விருப்பமாய்
மருவி மருகித் திரிகிறோம் !

நம் வாசல் எட்டாதவரை
யாருடைய மரணமும்
நமை எட்டுவதில்லை !

துக்கம் விற்கிறோம்
தூக்கம் வாங்க
தூரதேசம் போகிறோம் !

மழலை ரசிக்க
மணி போதவில்லை,
காணொளியில் மூழ்குகிறோம் !

வடை தேடும் எலியாக
நிதம் பணம் தேடியோடி
களைத்து களிக்கிறோம் !

நிதானம் விற்றுவிட்டு
நிதர்சனம் மறுத்துவிட்டு
நிகழ்காலம் கொன்றுவிட்டு
வேகமாய் ஓடுகிறோம்...!
எதைத் தேடி ???

எழுதியவர் : வினோதன் (27-Jun-14, 6:48 pm)
பார்வை : 118

மேலே