எரிகிறது இதழ் முத்தங்கள்
செவ்வரி தீ- என
துடிக்கும்
சிறு எறும்பின்
தீவிரம் எனக்கும்....
சித்திர வாத்தியம்
அதற்கும்
சிலையில்லை முகம்
என இதழ் விரிக்கும்....
பேசுகின்ற இதழ்களில்
கூசுகின்ற மொழிகள்
இதழ் குவிக்கும் யோசனையில்
சிறு வரிகள் உளிகள்....
பட்டு, படபடக்கும் சொற்கள்
படும் போதே தெறிக்கும் பனங்கற்கள்
மொட்டவிழ்ந்த பூக்காட்டில்
மெட்டுரைத்து சிரிக்கும் பூவிதழ்கள்....
இதழ் தீண்டும் சிறு பார்வை
இனி தீண்டும் இசை கோர்வை
வளையாத புது சுழிப்பில்
வளைந்தோடும் குறு நாணம்.....
திறவா தேடலின் தீவிரம்
தீக்குள் விரல் படும் புதுவரம்
தொட்டால் சிணுங்கி அல்ல நிலவரம்
தொட தொட மலர்ந்திடும் இதழ் நிறம்....
எவன் செதுக்கிய மலர்
என்ற-கேள்வியில்
அவள் செதுக்கிய
புன்னகை பதில் ஒன்று,
தொடாத நிலையில் ஜென் என்றும்
பாடாத கலையில் பண் என்றும்....
தீண்ட தீண்ட
தூண்டும், ஆண்டும்
கணத்தே கிடக்கிறதாய்
விரிகிறது, விரிகிறது
இதழ் யுத்தங்கள்....
இடைவரிகளில்
தெரிகிறது, எரிகிறது
இதழ் முத்தங்கள்....
கவிஜி