பண்டைக்கால விஞ்ஞானிகள்
எழிலரசன் காலை 5:3௦ மணியிலிருந்தே கிளம்பத்துவங்கி விட்டான். பரபரப்பும் அழுத்தமும் அவன் முகத்தில் குடியேறி யிருந்தன.அவனின் பரபரப்பை அவன் வீட்டிலும் கொஞ்சம் பரவவிட்டிருந்தான்.
“அம்மா..........அம்மா..... என்னுடைய வாட்ச் எங்கே? அம்மா..........”
“ஐயோ எழில் உன் கணினி மேசையில் தான் இருக்கும் நன்றாய்ப் பார்.”
“அம்மா........என்னுடைய கோட்டும் பேன்ட்டும் எங்கே அம்மா....... இரவே தேய்த்து வைக்கச் சொன்னேன், அப்போதெல்லாம் கேட்காமல் காலை நான் கிளம்பும் போது என்னைப் பாடாய்ப்படுத்துகிரீர்கள்.”
“வந்துவிட்டேன் எழில்.......... உன் துணிகளைக் காலை எழுந்தவுடனேயே தேய்த்துவிட்டேன். இந்தா வைத்துக்கொள்.”
“இவ்வளவு அவசரமாய்க் கிளம்ப வேண்டுமா கொஞ்சம் பொறுமையாய்ப் போகலாமே.பார் எவ்வளவு பதட்டம் உன்னிடம்”
“அம்மா நான் எட்டரை மணிக்கெல்லாம் மதுரை சென்றாக வேண்டும்.அமெரிக்காவிலிருந்து நம் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்ய ஆட்கள் வருகிறார்கள்.நான் சென்று ஏற்பாடுகள் சரியாய் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.அதற்குமுன் வீட்டில் கண்மணியை வேறு பார்த்துவிட்டு செல்லவேண்டும், இல்லையென்றால் கோபித்துக் கொள்வாள். நான் காரில் வேகமாய்ச் சென்றாலே ஒன்றரை மணிநேரம் ஆகும்.பின் பதட்டம் வராதா எனக்கு.”
“சரி சரி உடை மாற்றிவிட்டு வா. நான் உனக்கு டீ போட்டு வைக்கிறேன்.”
எழில் தன் அன்னையிடம் தேநீரை வாங்கிக்கொண்டான், அதைப் பருகிக்கொண்டே துளசி மாடத்திலிருந்த பாட்டியிடம் வந்தான்.
“பாட்டி...தாத்தாவிடம் நான் கிளம்புவதற்குமுன் ஒரு விஷயம் பேசவேண்டுமென்று சொன்னேனே சொன்னீர்களா?”
“சொல்லிவிட்டேன் ...... நேற்றிரவே சொல்லிவிட்டேன் அவர் மாடியில் த்யானத்தில் அமர்ந்திருக்கிறார்.
நீ டீயைக் குடி ...இப்போது வந்துவிடுவார் ”,என்று பாட்டி அவனிடம் கூறிவிட்டு தன் வழிபாட்டினைத் தொடர்ந்தார்.
எழிலரசனின் தாத்தா துரைச்சாமி தான் அந்த ஊர்ப் பெரியவர். ஊரின் அணைத்து முக்கிய விழாக்களிலும் முன்னிலையில் இருப்பவர் அவரே. ஊரின் முக்கிய முடிவுகள் அனைத்தும் அவரால் தான் எடுக்கப்படும். ஊரில் அதிமான செல்வமும் மக்கள் அனைவரின் அன்பையும் பெற்ற குடும்பம் அவர்கள் குடும்பம் தான். ஐந்தாறு தலைமுறைகளாக அவர்கள் குடும்பமே ஊருக்கு தலைமை தாங்கி வந்தாலும் அக்குடும்ப முன்னோரைவிட துரைச்சாமி ஐயாவே மகத்துவம் வாய்ந்தவராய் மக்களால் கருதப்பட்டார். அதற்க்குக் காரணம் அவருடைய உயர்ந்த பண்புகள். கிராமம் என்றால் மக்களுக்கு வாழ்வாதாரம் ஒன்று விவசாயம், நிலம் இல்லாதவர்கள் வேறேதும் கூலிவேலை செய்வதை வாழ்வாதாரமாய் வைத்திருப்பர். ஆனால் அந்த ஊரில் பாதிபேரின் வாழ்வாதாரமாய் விளங்குவது துரைச்சாமி ஐயாவின் குடும்பம் தான். அவருக்கு வயது எண்பதைக் கடந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கும். ஆனால் மனிதர் இன்றும் இரும்பினைப்போல் திண்மை கொண்டவராய் விளங்குகிறார். கட்டுடல், சற்று கருப்பாக இருந்தாலும் அழகான முகம், அளவான நீளத்தில் அடர்த்தியான மீசை, என்ற அவரது தோற்றத்தைப் பார்ப்பவர்கள் எண்பது வயதென்றால் நம்பவே மாட்டார்கள்.
ஊர் மக்களிடம் துரைச்சாமி ஐயா என்று பேர் சொன்னாலே கையெடுத்து வணங்குவர், அத்தகைய மரியாதையோடு மக்களிடம் அவர்மேல் கொஞ்சம் பயமும் இருக்கும். ஏனெனில் அவருக்கு நியாமும் தர்மமும் மிகவும் முக்கியம். அதை எவரும் சற்றும் தவரிவிடக்கூடாதென நினைப்பார். அப்படி தவறும் மனிதர்கள் அவரின் கடுமையான கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
அவர் நன்றாய்ப் படித்தவர். கல்விக்கு என்றால் யோசனையே செய்யாமல் உதவுவார். ’விவசாயத்தையும் கல்வியையும் எப்போதும் விட்டுவிடக்கூடாது’ என்பார்.
ஊருக்கே அரசன் போல் விளங்கும் துரைச்சாமி ஐயாவுக்கே அரசன் எழிலரசன் தான், அவன் மீது அவருக்கு அவ்வளவு பாசம். அதனாலோ என்னவோ மற்ற அனைவரும் அவனை ‘எழில்’ என்று அழைக்க, அவர்மட்டும் ‘அரசு’ என்றே அழைப்பார். அவனின் காதல் திருமணம் வரை அவனுக்கு துணையாய் இருந்து அவன் வாழ்கையை அவனின் விருப்பம்போல் அமைத்துக்கொடுத்தார். ஆனாலும் அவர் தன் அளவுகடந்த பாசத்தை வெளிகாட்டிக் கொள்வதில்லை கண்டிப்பான மனிதராகவே காட்சியளிப்பார்.
மணி 6:10 ஆகியிருந்தது.
“என்னப்பா அரசு ஊருக்கு இப்போதே கிளம்பிவிட்டாயா?” என்றபடி மாடியிலிருந்து இறங்கி வந்தார் துரைச்சாமி.
“ஆமாம் தாத்தா கொஞ்சம் வேலை இருக்கிறது”, என்றான் எழில்.
“ஓகோ அப்படியா... சரி. ஏதோ முக்கியமாய்ப் பேசவேண்டும் என்றாயாமே!.. பாட்டி கூறினாள் .சொல் என்ன விஷயம்.” என்று கூறிவிட்டு நாற்காலியை எடுத்து அவன் அருகில் போட்டு அமர்ந்தார்.
“தாத்தா நான் நேராக விஷயத்திற்கு வருகிறேன். நம் கிராமத்தில் சரியாக மழை பெய்து ஐந்து வருடங்கள் ஆகிறது. அதுவும் கடந்த இரு வருடங்களாக சுத்தமாய் மழையே இல்லை. மரங்கள் பாதி கருகி இறந்துவிட்டன, இப்போது மீதியும் கருகத் தொடங்கிவிட்டன. ஆழ்துளைக் கிணறால் தண்ணீர் வரவைக்க எண்ணினால் ஆயிரம் அடிகளைத் தாண்டி போர் போட்டாலும் தண்ணீரே வரவில்லை. செலவுதான் மிச்சம். வேறு எந்த பயிரும் போட்டு விளைவிக்கவும் முடியாது.”
“ஆகையால் தான் சொல்கிறேன் நம்முடைய நூற்றி ஐம்பது ஏக்கர் நிலத்தினையும் விற்று, வரும் பணத்தினைக் கொண்டு தொழிற்ச்சாலை துவங்கலாம். நான் எடுக்கும் செயல்கள் நிச்சயம் வெற்றி பெரும் என்று உங்களுக்குத் தெரியும். இதுவரை அப்படித் தான் நடந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நான் நகரத்தில் நன்றாய் இருக்கும்போது நீங்கள் அனைவரும் ஏன் இந்த தண்ணீர் இல்லா நிலத்தில் கிடந்து தவிக்கிறீர்கள். என்னோடு வந்துவிடுங்கள் ”, என்று இடையில் எங்குமே நிறுத்தாது பேசி முடித்தான்.
அவன் இப்படியொரு விஷயத்தைப் பேசுவான் என்று எதிர்பார்க்காத துரைச்சாமி சற்று திகைப்போடு அமர்ந்திருந்தார். பின் “இது சரிவராதே அரசு” என்றார் மெல்லிய குரலில்.
“தாத்தா நீங்கள் எதைப்பற்றி யோசிக்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. நம்மையே நம்பியிருக்கும் கிராம மக்களைப் பற்றிதானே?...தண்ணீர் இல்லாததால் ,மழை பெய்யாததால் நம்மைவிட அதிகம் கஷ்டப்படுபவர் அவர்கள்தான். இம்மக்களுக்கு நம் தொழிற்ச்சாலையில் வேலை தருகிறேன். அவர்கள் இங்கு வரும் வருமானத்தைவிட அங்கு அதிகமாகவே சம்பாதிப்பர்.” என்றான் முக மலர்ச்சியோடு.
சற்று நேரம் அமைதியாய் இருந்தவர் பேச ஆரம்பித்தார், “அரசு, அப்படியில்லையப்பா...மக்கள் தொகை நாட்டில் பெருகுகிறது, விளைநிலங்கள் பல அழிக்கப்பட்டுவிட்டன. உணவின் தேவை பெருகிக் கொண்டே வருகிறது. அந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய விவசாயம் வேண்டும். கஷ்டம் வருகிறது என்று நம் போன்றவர் எல்லாம் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யச் சென்றுவிட்டால், உணவை உற்பத்தி செய்ய யார் இருப்பார்கள். விவசாயம் என்றும் கைவிடப் படக்கூடாது என்றார்.”
எழில், “தாத்தா! விவசாயம் செய்யத் தண்ணீர் வேண்டுமே. இங்கு தான் தண்ணீரே இல்லையே”. என்றான் உரத்த குரலில்.
“தண்ணீர் பஞ்சம் அவ்வப்போது வரத்தான் செய்யும் அரசு. அதற்காக மழையே வராதென முடிவுசெய்து விடுவதா. எது நடந்தாலும் நிலத்தை விற்கக்கூடாது.” என்றார் கண்டிப்பாக.
அவன் விடுவதாக இல்லை, ”தாத்தா இதனால் மக்கள் நலம்பெறுவர், அதுமட்டுமல்லாமல்.....” என்று அவன் கூறும்போதே துரைச்சாமி ஐயா குறுக்கிட்டார் ”அரசு.......’விவசாயத்தை எத்தகைய சூழலிலும் விடக்கூடாது’ என்பது என் கொள்கை. நிலத்தை விற்கக்கூடாது. நீ என்ன கூறினாலும், இதுதான் என்
முடிவு.” என்று மேலும் கண்டிப்புடன் கூறினார்.
எழிலரசன் பொறுமை இழந்தான், கோபம் கொண்டான், ”இல்லை தாத்தா இல்லை உங்களைப் பெரிய மனிதர் என்று நினைத்தேன் நீங்கள் அப்படியில்லை. நீங்கள் பொதுநலம் பேணுபவரும் இல்லை. உங்கள் கொள்கைக்காக மக்களின் வாழ்வை அழிக்கும் சுயநலவாதி. சொத்து உங்களை விட்டு போய்விடக்கூடாது என்று பயப்படுகிறீர்கள். நீங்கள் வெளியில் நல்லவர் வேஷம் போடும் வேஷக்காரர், இனி எந்நாளும் இவ்வீட்டின் வாசலைக்கூட மிதிக்க மாட்டேன். நான் போகிறேன்”. என்று கத்திவிட்டு காரில் ஏறிப் பறந்தான்.
அவனின் அத்தகைய பேச்சையும் கோபத்தையும் எதிர்பாராத மற்றவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைப்பில் சிலையாய் நின்றார்கள். துரைச்சாமி ஐயா மட்டும் மெல்லிய புன்னகையோடு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.
எழிலரசன் துரைச்சாமி ஐயாவின் ஒரே பேரன்,அவரின் ஒரே மகனுக்குப் பிறந்தவன். பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்று முப்பது வயதுக்குள் மதுரையில் ஒரு நிறுவனத்தின் பங்குதாரராய் முற்றிலும் தன சொந்த உழைப்பால் மட்டுமே உயர்ந்து நிற்பவன். சென்ற வருடம் தான் காதலித்த கண்மணியை தாத்தா துரைச்சாமியின் உதவியால் மணந்து கொண்டான். தற்போது தன் மனைவியான கண்மணியோடு மதுரையில் தனியாக வசித்து வருகிறான். மாதத்தில் இருமுறை மனைவியோடும், பலமுறை தனியாகவும் அவன் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். சொந்தமாக தொழிற்ச்சாலை தொடங்க வேண்டுமென்பது அவன் இலட்சியம்.
மாலை ஏழு மணிக்கு அலுவலகப்பணிகள் முடித்துவிட்டு வீட்டினுள் நுழைந்தான் எழிலரசன். கண்மணி சோபாவில் அமைதியாய் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்தவுடன் எழில் ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டு கதறி அழுதான்.
“என்னாச்சு எழில் ஏன் இப்படி அழுகிறீர்கள். தயவு செய்து சொல்லுங்கள்”. என்றாள் கண்மணி பதற்றத்துடன்.
“காலையில்........காலையில்..தாத்தாவிடம்.......”, என்று சொல்லிக்கொண்டே அழுதான் அவன்.
இதைக்கேட்டவுடன் பதற்றம் குறைந்தவளாய் தேம்பி அழும் அவனை சோபாவில் அமரவைத்து ஆதரவாய்த் தன் தோளில் சாய்த்துக்கொண்டு பேசத்தொடங்கினாள், ”மதியம் தான் அத்தையிடம் பேசினேன் ஊரில் நடந்தவற்றை எல்லாம் கூறினார்கள். கோபத்தில் தாத்தாவிடம் பேசக்கூடாத வார்தைகளை எல்லாம் பேசிவிட்டு இப்போது வந்து அழுதால் எப்படி?”.
அவளை மெல்ல நிமிர்ந்து பார்த்தவன், ”விஷயம் அதுவல்ல கண்மணி இன்று அலுவலகத்தில் நடந்ததுதான்”. என்றான்.
“என்ன நடந்தது அலுவலகத்தில் ? ”.
அவன் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான், தெளிவான குரலில் ஆரம்பித்தான், ”இன்று எம்மோடு ஒப்பந்தம் செய்ய வந்திருந்தது அமெரிக்காவின் ஒரு தனியார் நிறுவனம். அவர்களுக்கு மதுரை திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கிராமங்களில் மொத்தமாய் ஆயிரம் ஏக்கர் நிலம் வேண்டுமாம். வேறெதற்காகவும் அல்ல விவசாயம் செய்யத்தானாம். அதற்கு நம் நிறுவனத்தின் உதவியை நாடி வந்துள்ளனர்.”
“நான் அவர்களிடம்,’விவசாயம் செய்ய நிலம் வேண்டும் என்கிறீர்கள், அப்படியிருக்க ஏன் தண்ணீரின்றி வறண்டுகிடக்கும் எங்கள் பகுதிகளை வாங்குகிறீர்கள் ?’ என்று கேட்டேன். என் சந்தேகத்திற்கு அவர்கள் தந்த விளக்கமான பதிலில்தான் நொறுங்கிப்போனேன்.”
“என்ன கூறினர் ?” என்று கண்மணி வியப்புடன் கேட்டாள்.
“அவர்கள் இவ்வாறு கூறினர், ‘உலகெங்கும் உணவுத்தட்டுப்பாடு மிகுந்து வருகிறது இன்னும் இருபது ஆண்டுகளிளது தாண்டவமாடத் துவங்கிவிடும். அதற்காகத்தான் எங்கள் நாடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் விவசாய நிலங்கள் வாங்குகிறோம். உணவின் தேவை அதிகரிக்கும்போது காய் கனிகளை அதிக விலைக்குச் சந்தையில் விற்ப்போம்.’
‘தண்ணீர் இல்லாத நிலங்களின் உரிமையாளர்கள் தான் நிலத்தினைக் குறைவான விலைக்கேனும் விற்றுவிட்டு வேறு தொழிலுக்குச் செல்ல தயாராக இருப்பர். மற்றவர்கள் அதிக பணம் கொடுத்தாலும் விற்கமாட்டார்கள். அவர்களிடமிருந்து எளிதில் நிலத்தை வாங்க முடியாது. தண்ணீர்ப் பஞ்சம் நூற்றாண்டில் ஓரிரு முறை வரத்தான் செய்யும். அதற்காக மழையே வராது என்று முடிவுகட்டிவிட முடியாது மிஸ்டர் எழில்’.
‘அதோடு நீங்கள் எங்களோடு ஒப்பந்தம் செய்யவிருப்பதால் இதைக் கூறுகிறோம். பஞ்சம் போன்ற கடுமையான காலங்களில் தற்காலிகமாய் வேறு தொழில் செய்யலாமேயொழிய விவசாயத்தை முற்றிலும் துறந்துவிடக் கூடாது. இதையறியாத அந்த மக்கள் ‘உழவு’ தலைமுறைகளைக் காக்கும் இறைவனின் வரமென்பதை உணராமல் விற்றுவிடுகிறார்கள் நிச்சயம் வருந்துவார்கள். நாங்கள் அதை உணர்கிறோம் லாபம் எடுக்கிறோம் பயன்பெறுகிறோம்.’ என்றனர் .”
கண்மணி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கண்மணி இதைத்தான் என் தாத்தாவும் கூறினார். அவர் கூறியபோது கேட்காமல் விட்டுவிட்டேனே. சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்யக் கூடாது என்று அனைவரும் நம் காதலை எதிர்த்த போது, நமக்குத் துணையாய் நின்று ஆதரவு தெரிவித்த அந்த பெரிய மனிதரின் சொல்லைப் புரிந்துகொள்ளாமல் அவரை இழிவாய்ப் பேசிவிட்டேனே !. மனித சமுதாயத்தின் நலனை நினைத்தவரை சுயநலவாதி என்றேனே.”
“ நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல கண்மணி. அவர்கள் செயல்களில் அர்த்தமுள்ளது. அவர்கள் மேதைகள் பண்டைக்கால விஞ்ஞானிகள்.”
“மரம் வணங்கப்படுவது காற்றை தூய்மையாக்கும் அதன் மகத்துவம் அறிந்து அது காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். என் தாத்தா எத்தகைய சூழலிலும் விவசாயம் கைவிடப்படக்கூடாது என்று கூறியதும் உழவு மனித சமுதாயத்தைக் காக்கும் என்பதற்காகத்தான். அத்தகைய பண்டைக்கால நெறி நடக்கும் விஞ்ஞானியைத் தவறாய்ப் பேசிவிட்டேனே.” என்று மீண்டும் அழத் தொடங்கினான்.
கண்மணி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள், ” அழாதீர்கள் எழில், தாத்தாவிற்கு உங்கள்மேல் எந்த கோபமும் இல்லையாம், நாளை காலை சென்று அவரிடம் மன்னிப்பு கேட்போம். சரியா.” என்றாள்.
“இல்லை வேண்டாம் கண்மணி. நாம் இப்போதே சென்று மன்னிப்பு கேட்போம். வா ! கிளம்பலாம்.”
அவர்கள் இருவரும் துரைச்சாமி ஐயாவைப் பார்க்க ஊருக்குக் கிளம்பிச் சென்றனர்.