தேனாம் தமிழுள் சாய்ந்தேன்

தேனாம் தமிழுள் சாய்ந்தேன்!
சிந்தையில் தெளிவைத் தேடி
திரிந்திடச் சிலையைக் கண்டேன்
விந்தையாய் வீசும் காற்றாய்
விரிந்திடு வான வில்லாய்
அந்தியின் அழகு வானாய்
அரும்பிய பனியின் நீராய்
சிந்தினாள் சிந்தை உள்ளே
சிலிர்த்துயான் சிலையை மேவ
அருளினாள் செறிவை அள்ளி
அள்ளிட அவளுள் ஆழ
மருளெலாம் மறைந்தே மாள
மனமெலாம் மணக்க மங்கை
இருளற்ற இன்பம் எய்த
எரித்தனள் தானெனு மென்னை
கருகின கயமை நெஞ்சம்
கவிந்தது காவாய் வாழ்வே
தகத்தக வென்றே தாவித்
தகைத்தனள் தன்னலந் தன்னை
இகமெலாம் எனதெனு மெண்ணம்
எழுந்திடா வண்ணம் ஏவி
அகமெலாம் அருளால் ஆழ்த்தும்
அரியநற் கவிதை செய்ய
திகட்டிடா அவளுள் சேர்க்கத்
தேனாம் தமிழுள் சாய்ந்தேன்
இளம்... 16 10 2013