தாயே இயற்கை

தாய் இயற்கை.
அம்மா! நான் கொஞ்சம் தலைசாய வேண்டும்.
சும்மா தான் நெஞ்சம் அலைஓய வேண்டும்.
அம்மா நீ என்னைக் கொஞ்சவும் வேண்டும்.
சும்மா என் தங்கை கெஞ்சவும் வேண்டும்.
வான்பரந்து விரிந்த வெளி கவிகூறுதே.
நான்பிறந்து வளர்ந்த கதை நினைவாகுதே.
சிம்மா சனம்கூட சுகம்இல்லை தாயே!
அம்மா மடிபோல வரமென்ன தாயே!
ஈன்றதாய் மடியாக வான் தோன்றுதே.
மாண்டதாய் உரைப்பதாய் ஊர் நம்புதே.
நீண்டகடல் தாயாகத் தான் வாழ்கிறாய்!
ஆண்டஉன தாகாயம் நான் போற்றுவேன்.
தென்றலாய் வருடியே எனைத் தீண்டுவாய்!
தூறலாய் உருகியும் நலம் வேண்டுவாய்!
கதிராகத் தினம் வந்தும் உறவாடுவாய்!
மதியாக மனம் கொண்டும் தினம் பாடுவாய்!
தாய் உதிர்த்த மகிழ்வெல்லாம் பால்வீதியில்.
வாய் பதித்த ஒளியாக மேல்கூரையில்
நோய் எதிர்க்க நான்சிரிக்க நீ சிரிக்கிறாய்!
சேய் நினைப்பில் தாய்இயற்கை நிதம்வாழ்கிறாய்!
கொ.பெ.பி.அய்யா.