வா தோல்வி வா

ஒரு தோல்வியை
அதன்
பச்சை வாசனையோடு
அப்படியே
அப்படியே
எதிர்கொள்ளப் போகிறேன் !
என்
நம்பிக்கையெனும் தீவுகளை
ஒரு சுனாமியென
அது
ஆக்கிரமிக்கட்டும் !
தன்
பள்ளத்தாக்கைக் காட்டி
அது என்னை
பயமுறுத்தினாலும்
தற்கொலைக் கிளைகளை
நாடப்போவதில்லை
நான் !
ஒரு
சிகெரெட் புகையைப் போல
நுரையீரல் முழுக்க
இதமாய்ப் பரவட்டும்
விரக்தி !
என்
முயற்சிகளுக்கு அடிக்கும்
சாவுமணியோசையில்
தியானம் பழகவேண்டும்
நான் !
தோல்வியின் மயானத்தில்
செவ்வனே நடக்கட்டும்
என்
காத்திருப்புகளின்
இறுதிச்சடங்கு !
ஒரு வெற்றியை
அத்தனை தயாரிப்புகளோடும்
கொண்டாட
காத்திருப்பது போல
நான்
காத்திருக்கிறேன் .............
வா
தோல்வி
வா !
===================
- குகுச்சந்திரன்