எழுத்து காம்

எழுத்து தளத்தில் எழுதத் தொடங்கி
முழுதாயோ ராண்டு முடித்தேன் - பொழுதும்
பறந்தோ டியதே, படைப்பும் பெருகிச்
சிறக்கவருள் தாயிறை வா .

நட்பாய் உறவுகொண்டு நாளுங் கவிபடைத்து
கட்டியே அன்புவட்டங் காத்திட்டோம் -நுட்பமாய்
நற்கருத்து நாமே நமக்குள் பகிர்ந்திடும்
கற்குந் தளமே எழுத்து .

எழுத்தினால் பேறுபெற்றோம் ஏற்றமுங் கண்டோம்
விழுதெனத் தாங்கவேர் விட்டோம் -வழுத்துவோம்
தாள்வணங்கி, வெல்லுந் தரணியில் தாய்மொழியே,
தோள்கொடுப்போம் நற்பா படைத்து .

யான்பெற்ற பாக்கியம் யாவர்க்குங் கிட்டிட
நான்சென் றுரைப்பேன் எழுத்துதான் -தேன்சிந்தும்
சொர்க்கம், துளியேனும் சோர்வின்றி காத்திடும்
கர்வமுடன் சொல்வேன் சிறப்பு .


( இன்று எழுத்து தளத்தில் இணைந்து ஒரு வருடம் ஆகின்றது . எழுத்து தளம் எனக்கு கிடைத்த வரமாகும் . எத்தனை உறவுகள் , நட்புகள் ....!! படைப்பாளிகளை ஊக்குவிக்கும் திரு .அகன் ஐயா அவர்களுக்கு என் இதயப் பூர்வமான நன்றிகள் !! பிடித்திருந்தால் தட்டிக் கொடுக்க , தவறிருந்தால் திருத்திக் கொடுக்க என இங்கு நான் கற்றவை ஏராளம் . எசக்கியேல் ஐயா முதற்கொண்டு , விவேக் ,கன்னியப்பன் ஐயா , ராஜ மாணிக்கம் அண்ணா ...என்று கற்பித்தோர்....பலருண்டு . எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்
கருத்துப் பூக்களால் நித்தம் வந்து அலங்கரித்த அன்பு பிள்ளைகளுக்கும் , அன்பான நண்பர்களுக்கும் ,மிக முக்கியமாக எழுத்து தளத்திற்கும் ,அதன் நிர்வாகி ராஜேஷ் குமார் அவர்களுக்கும் , மற்றும் எழுத்துதள தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும் , அனைத்து உறுப்பினர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ....நன்றிகள் !!
எழுத்து .காம் இணைய உலகின் முடிசூடா எழிலரசியாய்த் திகழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் . )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Aug-14, 12:53 am)
பார்வை : 130

மேலே