தடையின்று ஓடும் டாஸ் மாக் ஆறு
வயல்கள் உள்ளன
மழைதான் இல்லை
பிள்ளைகள் மேல்
பெய்த வசைபோல்
எங்கோ இடி இடித்தது!
பயன்தான் ஏதுமில்லை!
அமைதியைச்
சூரியக் கதிர்கள்
அமுக்கிப் பிடித்திருந்தன்!
கூட்டம் இருந்தது
குமுறல் இருந்தது
குடிமகன்கள் உள்ளே
வேட்கை இருந்தது
‘டாஸ்மாக்’ பானம்
ஆறாய் ஓடிக்கொண்டிருந்தது!
சலசலக்கும்
பறவை கீதமாய்
துள்ளி விழுகின்ற
மீன்குஞ்சுகளுக்கிடையே
பூட்டிக் கிடக்கும்
வாயில் கதவுகளுக்குப் பின்
வாட்டம் தேங்கிய முகத்துடனும்
நோட்டம் பார்க்கும் கண்களுடனும்
ஏக்கம் மிகுந்த இதழ்களுக்குள்
ஊக்கம் குறைத்தபடி
தாகம் தழும்ப
அமைதி உறங்கிக்கொண்டிருந்தது
கூட்டமும் குமுறலுமாய்
குடிமகன்கள் குளிர
வேட்கை தணித்தபடி
‘டாஸ்மாக்’ ஆறு
தடையின்றி ஓடிக்கொண்டிருந்தது!
==== =====