பத்தாங்கிலாசு
தாலி செஞ்சு வச்சு
தாய்மாமன் காத்திருக்கான்
சொத்து போயிரும்முன்னு
பெத்த அம்மாக்காரி
தம்பி கருப்பானாலும்
தங்க கம்பிங்கரா !
பத்தாவது படிச்ச எனக்கு
பட்டன மாபிள்ள வேணுமுன்னு
படிக்காத எங்கப்பன்
அடிக்காத கொறையா எங்க
ஆத்தாட்ட சொல்லி என்ன ...
மஞ்சக்கயிறு நடுவில
மூணு பவனு தாலி கட்டி
மாமன் கொண்டுவர
பாவிபுள்ள சொல்லுனத கேளுன்னு
பால்டாயில் பாட்டிலோட
நாலு பவனு துங்கட்டான்
காதில தொங்க எங்க
அம்மத்தா மொதல்ல வந்தா
ஆத்தா கைய புடுச்சு ...
என்ன சொல்ல
எனக்கு விதிச்சது இதுதான்னு
கழுத்த நீட்டி இப்ப
கழுத வயசாச்சு .
மூத்த புள்ள அமெரிக்கால,
மூணு மாச விசால
பொண்டாட்டி பிரசவம் பாக்க
பொறப்படுன்னு போன் போடறான்
அவரு சொல்லாரு
அடியே நீ பத்து படிச்சது
அமெரிக்காவுல எடுபடும்
மூனா கிளாசு அப்பன
மூத்த புள்ளைக்கு தேவையில்ல
மாசம் முந்நூறு டாலராம
மாசப்புள்ளைய கவனிச்சிக்க.
மூணு சேல வாங்கி தந்து
மூத்த பய்யன் முடிச்சுடுவான்
உங்க அம்மத்தாவவிட
உம் புள்ள புத்திசாலி !
16.8.14