அழகான வாழ்க்கை ஆனந்தமாய் போட்டிக் கவிதை

பொன்னிறைக் கூடத னூடே
மின்மினிக் கோலம தாலே
உன்னத வாழ்வதை மேலே
அன்புட னாக்கிடுஞ் சேயே !

செந்நிற மாயொரு வீணை
என்னிலை ஏற்றிடுஞ் சேனை,
நன்னில மீதினில் வானை
புன்னகை யாலுதிர்ப் பானே !

முன்னிரு பாலொளிப் பற்கள்
மின்னிட வான்பிறை வீணே !
கன்னிக ளாயிரு சொற்கள்
கன்னலு மேகெடுந் தானே !

தன்னிரு கைகளில் மண்ணை
பின்னொளித் தாட்டுவான் கண்ணை
முன்வர வேயவ னன்னை
நன்னடை காட்டிடு வானே !

அன்னிய மாகிடும் நாளை
என்வச மாக்கிடும் பாளை !
என்னவன் பூநகை போலே
முன்னிலை வேரெது மேலே !

முன்னுரை ஆகிவந் தானே
நன்னுரை ஆக்கவந் தானே
இன்னுரை வாழ்வது வீழா
தென்றுரைத் தாடிவந் தானே !

பன்னிரு ஆண்டுக ளோடி
பின்னது பூத்தென போடி,
நன்னுல காக்கிட வந்த
என்னரும் பாலனுக் கீடோ !

சொன்னது ஓர்துளி தேனே
இன்னமு தோரடை தானே !
இன்னமு மாக்கிட பேனா
வின்முனை, மைவளம் காணா !

எழுதியவர் : மீ.மணிகண்டன் (22-Aug-14, 1:34 am)
பார்வை : 335

மேலே