சுயம்

திக்குகளற்ற வெளியில்
நினைவுகளற்ற சுகத்தில்
விரவிக்கிடக்கும் ஆசைகளை
கர்ண கொடூரமாய் தகர்க்கின்றன
நிகழ்கால முரண்பாடுகள்...!

உறவுக்குள் சிக்கியதில்
பாசங்கள் என்ற பாசாங்கு
விளங்கியதின் பின்னணியில்
பறந்து குவியும் காகிதங்களின்
பெயர்கள் பணமென்றறிந்தேன்...!

சத்தியங்கள் பொசுக்கப்படும்
ஒரு உலகத்தில்..
தர்மங்களின் நாயகனாய்
என்னை வரித்துக் கொண்டதில்
காயங்களுக்குள் அகப்பட்டு
ஆழ்ந்து கிடக்கிறது என் ஆன்மா!

எப்போதும் மேய்ப்பது போல
இன்றும் மேய்த்து மேய்த்து
களைத்துப் போயிருக்கிறேன்..
அடங்கா மனமென்னும்...
மாயப் பிசாசை..!

அடங்கும் பொழுதுகளில்
ஆர்ப்பரிக்கும் மனிதக் கூட்டம்
ஆழ்ந்துறங்கும் அர்த்த ராத்திரிகளில்
சுடலையில் அமர்ந்த சிவனாய்...
என்னை எரிக்கும் நித்திரைகள்
எரித்து...எங்கோ ஒரு ஏகாந்தத்தில்
இல்லாமல் இருக்கிறேன் நான்...!

எழுதியவர் : Dheva .S (22-Aug-14, 9:21 am)
Tanglish : suyam
பார்வை : 142

மேலே