காதல் விழிகள்-----------நிஷா
சாலையோரச் செடிகளிலே
சாய்ந்தாடும் சிறுமலர்கள்....
ரசித்திடத்தான் யாருமில்லை
விசித்திரம்தான் வீதியிலே!
சோலையோர மரங்களிலே
சுதந்திரமாய் சிறு கிளிகள்....
சோகம் சொல்ல முடியவில்லை
சாகக்கூட துணிவுமில்லை!
காலைநேரப் பனியினிலே
கண்சிமிட்டும் நினைவுகள்தான்...
காதல் கையில் சேரவில்லை
கண்ணீர் கூட மிச்சமில்லை!
நெடிதுயர்ந்த மலைகளிலே
நழுவிச்செல்லும் மேகங்கள்....
நேசம் கொண்ட இதயமில்லை
துவேசம் இன்னும் தூங்கவில்லை!
ஆற்றங்கரை அழகினிலே
ஆட்டம்போடும் சிறுமீன்கள்....
அருகினிலே அவனுமில்லை
அன்புக்கு மதிப்புமில்லை!
பூத்திருக்கும் தென்னம்பிள்ளை
பார்த்து ரசிக்கும் எந்தன் கண்கள்...
காலமெல்லாம் உந்தன் நினைவில்
காத்திருக்கும் காதல் விழிகள்.!!