கேள்வியும் பதிலும்

சில நேரங்களில் கேள்விகளும்
சில நேரங்களில் பதில்களும்
புரிதலின் வெறுமைக்குள்
மேய்ந்தபடி அலைகின்றன!

வரையறுக்கப்பட்ட கேள்விகள்
செரிக்க முடியாமல் உமிழப்பட,
வரைமுறையற்ற பதில்கள்
சடலமாய்ச் சரிந்து விழுகின்றன!

இன்னதெனத் தெரிந்தும்
வெளிச்சொல்ல இயலாத பதில்கள்,
முகம் திருப்பிக் கொள்கின்றன!

குழப்பத்திலாழ்த்திவிட்டு,
தன் சமநிலை கெடாமல்,
தற்காத்துக்கொள்ளும் பதில்கள்
எள்ளிநகையாடுகின்றன...
எல்லாக் கேள்விகளையும்!

குற்றவுணர்வேற்படுத்தி
குறுகுறுக்க வைக்கும் கேள்விகளை,
வெட்டிச் சாய்க்கும் வெறியோடு
வெளிக்கிளம்பும் பதில்களும்
கேள்விகளேயாம்!

பல நேரங்களில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
அளிக்கப்பட பதில்களை
புரிந்துகொள்ள முயல்வதைவிட
எறிந்துவிடல் நன்று!

அறிவிலிருந்து எழுவதாய்
அறியப்படுகின்ற
கேள்விகளும் பதில்களும்,
உண்மையில்
ஆணவத்திலிருந்து எழுவதே!

கேட்கப்படாத கேள்விகளும்
அளிக்கப்படாத பதில்களும்
ஆழ்மனதில்
உறைந்து கிடக்கும் இறுக்கமாய்.....
உண்மைக்கு நெருக்கமாய்!

எழுதியவர் : (2-Sep-14, 11:14 pm)
பார்வை : 53

மேலே