காதல் பொதுவானதுகன்னிகள் அல்ல-வித்யா
காதல் பொதுவானது, கன்னிகள் அல்ல.....!!-வித்யா
கவிஞர்களின்
வர்ணனைகள்எல்லாம்
மோகத்தின் வெளிப்பாடெனில்......
மின்மினியும்வெண்ணிலவும்
தென்றலும் பூவும்
கோடிக்கவிஞனின் கவியால்
கற்பழிக்கப் பட்டிருக்க வேண்டும்.....!!
இல்லையேல்
காதல் பொதுவுடைமை
ஆக்கப்பட்டிருக்கவேண்டும்.......!!
முத்தத்தில் தொடங்கி
முத்தத்தில் முடித்துக்கொள்ளும்
உதடுகளெல்லாம் காதலை
மென்மையாகவே உச்சரிக்கும்..........!!
அவையெல்லாம்
காதல் குருடர்களும்
செவிடர்களும்
இதயங்களை வாணிபம்செய்து
உடல்களை பண்டமாற்றும்
நூதன வியாபாரம்.....!!
எழுதாப் பக்கங்களைப்போல
ஒரு அழகான கவிதை
இருக்குமெனில்
அது காதலாக இருக்கும்.......
அதன் கரு.......
காதலர்களாக இருப்பார்கள்.......!!
இந்த அறிமுகம்போதும்
திரைச்சீலைக்குள்
சுயம்தொலைக்கும்
முகமூடி முதலைகளினின்று
காதலர்களை அடையாளம்
தெரிந்துகொள்ள...................!!
இவனென் காதலனென்றும்
நானிவன் காதலால் ஆனவளென்றும்
மார்தட்டிச்சொல்லும் நாளொன்றிற்காக
காத்திருக்கும் கன்னிகளை.....
புன்னகை பகிர்ந்த
இதழ்களோடெல்லாம்
இதழ் பொருத்தி
பொருத்தம் பார்ப்பது
அனுபவங்கள் பேசும் மொழி.........!!
தூக்கி எறிந்த மிட்டாய் காகிதம்,
பயணச்சீட்டு,
சிகரெட் துண்டு
ஸ்டிக்கர் பொட்டு,
கைக்குட்டை
தலைமுடி
என பைத்தியக்காரத்தனமாக
கண்டதையும் சேமிக்கும்
இச்செயல்களிலெல்லாம்
காதலில்லை
அதே சமயம் இவற்றிலெல்லாம்
காதல் இல்லாமலும் இல்லை.......
அதனினும் தாண்டி
அழுத்தமாக விழுந்த
ஆலங்கட்டி மழை போல.......
புதைந்த கல்லுக்குள்
ஒரு உளி
தோண்டி எடுத்த
சிலை போல........
எளியவனை
கவிஞானாக்கும் காதல்
எப்போதும்....
ஒரு "எழுதாக்கவி "
சிரிப்பதும், பின்
நமை அணைப்பதுமாகி
வரையறுக்கப்படா
வார்த்தைகளில் அடங்கிவிடும்
அன்பின் வெளிப்பாடு....!
இக்கவியில்
காதல் புரிந்திருந்தால்
தனிமையில் துணைக்கு வரும் நிலா
நம் காதலியாகிவிடுகிறாள்..........!
ஆனால்
அவளுக்கெப்போதும்
நாம் யாரோதான்......
என்பது புரிந்திருக்கும்....!!