ஐயமில் காட்சி யவர் - ஆசாரக் கோவை 94
கைசுட்டிக் கட்டுரையார் கான்மே லெழுத்திடார்
மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோ டொப்புரையார்
கையிற் குரவர் கொடுப்ப இருந்தேலார்
ஐயமில் காட்சி யவர். 94 ஆசாரக் கோவை
பொருளுரை: ஐயமற்ற அறிவுடையவர் பெரியோர் முன் கையால் ஒன்றைச்
சுட்டிக் காட்டிப் பேச மாட்டார்.
காலினால் எழுதிக் காட்ட மாட்டார்.
கல்வி முதலியவை இல்லாதவர்களை அவற்றை உடையாரோடு மெய்யே
என்று சாதித்து ஒப்புமை சொல்ல மாட்டார்.
மதிப்பிற்கு உரிய பெரியோர் கொடுப்பவற்றை உட்கார்ந்து கொண்டு கையில்
வாங்க மாட்டார்.
கருத்துரை:
பெரியோர்க்கு முன் கையைச் சுட்டிக்காட்டிப் பேசுதலும், காலால் எழுதுதலும்,
அறிவொழுக்கங்கள் இல்லாரை அவற்றையுடையார்க்கு ஒப்பாகச் சொல்லிச்
சாதித்தலும், பெரியோர் கொடுப்பதை இருந்து வாங்குவதும் தகாத செயல்கள்
ஆகும்.
‘காலாலெழுத்திடார்' என்ற பாடங்கொண்டால், காலால் எழுத்திட்டுக் காட்டார்
எனக் கருதலாம்.
காட்சி - அறிவு. சுட்டுதல் - குறித்துக் காட்டல்.