உள்ளுக்குள் நீ

வைத்து விட்டுப்போன
தேநீருக்கு
இனிப்பு போதாமல்
சர்க்கரை டப்பா தேடி
சமையலறையை
நான்
உருட்டும்போதும் .............
கண் கண்ணாடியை
சட்டைப்பையிலேயே
வைத்துக் கொண்டு
கண்ணாடி
கண்ணாடி
எனப் புலம்பியபடியே
நான்
தேடும்போதும் ...........
நம்
குழந்தைகளுக்கு
தின்பண்டம் வாங்கிவந்து
உன்னையும்
எடுத்துக்கொள்ளச் சொல்லி
சாடையாய்
நான்
தொண்டை செருமும்போதும் ..........
காதோடு
சோப்புநுரை
அப்பிக்கிடப்பது
உணராமல்
குளித்து முடித்த
உற்சாகத்தில்
விசிலடித்தபடியே
நான்
வலம் வரும்போதும்............
அலாரம்
அடிப்பது தெரியாமல்
கால்கள் பரப்பிக்கொண்டு
பெப்பரப்பே
என நான்
உறங்கும்போதும் .........
தொலைக்காட்சியில்
நீ பார்க்கும்
சீரியல்களுக்கு
தலை சொறிந்து
நான்
நெளியும்போதும் ..........
இரவு உப்புமாவில்
முந்திரிகளாய்ப் பார்த்து
பொறுக்கித் தின்றுவிட்டு
படுக்கையறையில்
தவிப்போடு
உன்னை நான்
பார்க்கும்போதும் ...............
முந்தாநாள்
போட்ட சண்டையின்
ஊடல் குறைந்து
உள்ளுக்குள் நீ
மெல்ல மெல்ல
புன்னகைக்கத் தொடங்குகிறாய் !
========================
- கிருஷ்ண தேவன்
குறிப்பு : ராம், உங்கள் " கற்றதனால் ஆய பயன் " கவிதையின் format ல் இக்கவிதை உருவாகப்பட்டதற்கு உங்களிடம் கொஞ்சம் excuse கேட்டுக்கொள்கிறேன் !